நாட்டின் எரிபொருள் கையிருப்பில் தட்டுப்பாடு இல்லை : செயற்கை நெருக்கடியை உருவாக்க சிலர் முயற்சி - பிரதி அமைச்சர் அனில் ஜயந்த - News View

About Us

About Us

Breaking

Saturday, March 1, 2025

நாட்டின் எரிபொருள் கையிருப்பில் தட்டுப்பாடு இல்லை : செயற்கை நெருக்கடியை உருவாக்க சிலர் முயற்சி - பிரதி அமைச்சர் அனில் ஜயந்த

(எம்.மனோசித்ரா)

நாட்டில் எரிபொருள் கையிருப்பில் தட்டுப்பாடு இல்லை. தற்போது நாட்டில் எரிபொருள் நெருக்கடி இருப்பதாகக் காட்ட சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் ஒரு செயற்கை எரிபொருள் நெருக்கடியை உருவாக்க முயற்சிப்பதாக தொழிலாளர் அமைச்சரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் சனிக்கிழமை (01) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை. எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு நாம் இடமளிக்கப் போவதுமில்லை. விலைத் திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் உரிமையாளர்களால் இந்தப் பிரச்சினை திட்டமிட்டு தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விநியோகத்தர்களுக்கும் சமூகத்தில் காணப்படும் நிலைமைக்குமிடையில் பரஸ்பர நிலைமையே காணப்படுகிறது. உண்மையில் சமூகத்தில் எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை.

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு நாம் இடமளிக்கப் போவதுமில்லை. எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கருகில் நீண்ட வரிசைகள் ஏற்பட்டுள்ளன. இதற்கு பொறுப்புக்கூற வேண்டியது யார் என்பது சரியாக இனங்காணப்படவில்லை.

எரிபொருள் விநியோகம் இடம்பெறவில்லையென சமூக வலைத்தளங்களில் பரவலாக தகவல்கள் பகிரப்படுகின்றன.

குறிப்பிட்டவொரு சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நபரொருவர் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளிலிருந்து தாம் விலகுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் எரிபொருள் விநியோகம் எவ்வித தடையும் இன்றி முன்னெடுக்கப்படுகிறது. அவ்வாறிருக்கையில் சமூக வலைத்தளங்களில் எதற்காக இவ்வாறான செய்திகள் பரப்பப்பட்டன என்பது தெரியவில்லை. எரிபொருள் விநியோக செயற்பாடுகளை சீர் குலைப்பதற்காகவே திட்டமிட்டு இவ்வாறான சதிதிட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கும், எரிபொருள் விநியோகத்தர்களுக்கும் இடையில் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது. இதன்போது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தாம் எரிபொருள் விநியோக நடவடிக்கைளிலிருந்து விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

இவ்வாறு பொறுப்பற்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது. தாம் விநியோக செயற்பாடுகளிலிருந்து விலகுவதாகக் கூறிவிட்டு முற்பதிவுகளை வழமை போன்று செய்திருக்கின்றனர். சில விநியோகத்தர்கள் வழமையை விட அதிக அளவில் எரிபொருட்களை முற்பதிவு செய்திருக்கின்றனர்.

அதற்கமைய இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முற்பதிவுகள் 1,696 உம், லங்கா ஐ.ஓ.சி. 471 உம், சினொபெக் 391, ஆர்.எம்.பார்க் 366 முற்பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய ஒட்டு மொத்தமாக 2,924 முற்பதிவுகள் பதிவாகியுள்ளன.

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் வழமையாகப் பதிவாகும் 1300 முற்பதிவுகளை விட இம்முறை 1600 என்றளவில் பதிவாகியுள்ளது. இது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எவ்வாறிருப்பினும் இதன் உண்மையான பின்னணியை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

எரிபொருள் நிரப்பும் நிலைய உரிமையாளர்களின் இலாப நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் காரணமாகவே விலை நிர்ணயம் இடம்பெறும் கால கட்டங்களில் இவ்வாறான பிரச்சினைகள் தோற்றுவிக்கப்படுகின்றன.

கடந்த 25ஆம் திகதியே விலை மாற்றம் தொடர்பில் நாம் அறிவித்திருக்கின்றோம். ஆனால் இதன்போது எரிபொருள் விநியோகத்தர்கள் எமக்கு எந்தவொரு விடயம் தொடர்பிலும் கருத்து தெரிவிக்கவில்லை. அல்லது 28ஆம் திகதி வழக்கு விசாரணை இடம்பெற்றபோதும் கூட இது தொடர்பில் அவர்கள் அறிவித்திருக்கலாம். ஆனால் அதனையும் செய்யவில்லை. மாறாக திடீரென எரிபொருள் விநியோகத்தில் இருந்து விலகுவதாக அறிவித்து பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளனர் என்றார்.

No comments:

Post a Comment