(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
அரசாங்கம் நிரந்தரமானது அல்ல, தற்காலிகமானதே. அரசாங்கத்துக்கு பெரும்பான்மை உள்ளது. ஆகவே, அரசாங்கத்தை அசைக்க முடியாது என்று குறிப்பிடுபவர்கள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நேர்ந்த கதியை சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (27) நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஜனாதிபதி செலவினத் தலைப்பு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மிகவும் திறமையானவர் என்பதை முதலில் குறிப்பிட வேண்டும். 3 சதவீதமாக இருந்த வாக்குகளை அதிகரித்து தமது கட்சியை ஆட்சிக்கு கொண்டு வந்துள்ளமையினால் அவர் திறமையானவரே. இப்போது கன்னி வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளார்.
தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றினால் மக்களின் ஆதரவு கிடைக்கும். இல்லாவிட்டால், மக்களின் எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும் என்பதையும் குறிப்பிட்டுக் கொள்கிறேன்.
வரவு செலவுத் திட்டத்தில் துண்டுவிழும் தொகையாக 2200 பில்லியன் ரூபா உள்ளது. எதிர்பார்க்கும் செலவுக்கு திறைசேறியின் ஊடாக நிதியை தேட முடியுமா? இதில் சவால்கள் உள்ளன.
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற மதுவரி மற்றும் இறைவரி திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் ஊடாக வருமானத்தை அதிகரிக்க வேண்டும். இவற்றின் ஊடாக வருமானத்தை அதிகரிக்க முடியாமல்போனால் நெருக்கடிகளை சந்திக்க நேரிடும்.
வழங்கிய வாக்குறுதிகளில் வரவு செலவுத் திட்டத்துக்கு முன்னர் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சில வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. எரிபொருள் வரிகளை குறைப்பதாக குறிப்பிடப்பட்டது. அது செய்யப்பட்டதா? மின் கட்டணத்தை மூன்றில் இரண்டாக குறைப்பதாக குறிப்பிடப்பட்டது. ஆனால், அதுவும் நடக்கவில்லை. தற்போதைய நிலைமையில் மின் கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக கூறப்பட்டது.
அத்துடன் அஸ்வெசும குடும்பத்தினருக்கு 15 ஆயிரம் ரூபா வரையில் வழங்குவதாக கூறினர். அதுவும் நடக்கவில்லை. இளைஞர்களுக்காக 10 மில்லியன் கடன் வழங்குவதாக குறிப்பிடப்பட்டது. அதுவும் நடக்கவில்லை. இந்த வாக்குறுதிகளையும் வரவு செலவுத் திட்டத்தில் கூறிய வாக்குறுதிகளையும் நிறைவேற்றினால் மக்கள் ஆதரவுடன் முன்னால் போகலாம். இல்லையென்றால், மக்கள் எதிர்ப்புக்கு உள்ளாகலாம்.
இதேவேளை நாங்கள் 20 வருடங்களுக்கு அரசாங்கத்தை வழங்கவோ அரசாங்கத்தை அசைக்கவோ இடமளிக்கப்போவதில்லை என்று அரசாங்கத்தில் சிலர் கூறுகின்றனர். இவ்வாறு கூறி தவறிய இடங்கள் உள்ளன.
கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தபோதும் நாங்கள் இப்படித்தான் கூறினோம். இவ்வாறு கூறித்தான் கவிழ்ந்தோம். இந்த அரசாங்கம் நிரந்தரமானது என்று எவரும் நினைக்கக்கூடாது.
இது தற்காலிகமானது. உரிமையாளராகவன்றி பொறுப்பாளராக இருங்கள் என்று அரசாங்கத்தில் உள்ளவர்களை கேட்டுக் கொள்கிறேன்.
தற்போது உலகில் போராட்டங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் வயிற்றில் அடிக்காமல் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் மக்கள் போராடும் நிலைமை உருவாகும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment