இலங்கையில் வருடாந்தம் 4 - 5 ஆயிரத்துக்கு இடைப்பட்ட குழந்தைகள் பிறவிக் குறைபாடு நோய்களுடன் பிறப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 4, 2025

இலங்கையில் வருடாந்தம் 4 - 5 ஆயிரத்துக்கு இடைப்பட்ட குழந்தைகள் பிறவிக் குறைபாடு நோய்களுடன் பிறப்பு

(செ.சுபதர்ஷனி)

வருடாந்தம் இலங்கையில் 3 இலட்சத்து 20 ஆயிரம் குழந்தைகள் பிறக்கின்றன. எனினும் அவர்களில் சுமார் 4 ஆயிரம் தொடக்கம் 5 ஆயிரத்துக்கு இடைப்பட்ட குழந்தைகள் பிறவிக் குறைபாடு நோய்களுடன் பிறப்பதாக விசேட வைத்திய நிபுணர் கபில ஜயரத்ன தெரிவித்தார்.

மார்ச் 3 சர்வதேச பிறவி குறைபாடு நோய் தினத்தை முன்னிட்டு கொழும்பில் அமைந்துள்ள இலங்கை மருத்துவ சங்கத்தில் திங்கட்கிழமை (03) ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் முதன் முறையாக 2006 ஆம் ஆண்டு நாடளாவிய ரீதியில் பிறவிக் குறைபாடு நோய்கள் தொடர்பில் விசேட ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது.

18 ஆயிரம் குழந்தைகளை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட மேற்படி ஆய்வின்போது நாட்டில் சிசு இறப்பு வீதம் குறைவடைந்து உள்ளதுடன், பிறவிக் குறைபாடு நோய்களுடன் பிறக்கும் குழந்தைகளின் வீதம் அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது.

வருடாந்தம் இலங்கையில் 3 இலட்சத்து 20 ஆயிரம் குழந்தைகள் பிறக்கின்றன. அவர்களில் சுமார் 4 ஆயிரம் தொடக்கம் 5 ஆயிரத்துக்கு இடைப்பட்ட குழந்தைகள் பிறவிக் குறைபாடு நோய்களுடன் பிறப்பதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

அத்தோடு வருடாவருடம் நாட்டின் பிறப்பு வீதமும் கனி சம அளவில் குறைவடைந்து செல்வதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. மேலும் 5 வயதுக்கு குறைந்த சிறுவர்களின் உயிரிழப்புக்கு 39 சதவீதம் பிறவிக் குறைபாடு நோய்களே பிரதான காரணமாக உள்ளது.

வெளிப் பார்வைக்கு புலப்படும் வகையிலும், எமது பார்வைக்கு அப்பாற்பட்டு உடல் உறுப்பு சார்ந்த பகுதிகளில் ஏற்படும் குறைபாட்டு நோய்களும் உள்ளன.

பிறவிக் குறைபாடு நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிவதுடன் உரிய சிகிச்சைகளை முறையாக பெறும் பட்சத்தில் நோயை முழுமையாக குணப்படுத்திக் கொள்ள முடியும்.

யாழ். போதனா வைத்தியசாலை, வவுனியா வைத்தியசாலை, கண்டி தேசிய வைத்தியசாலை, பேராதனை வைத்தியசாலை, கொழும்பு சிறுவர் வைத்தியசாலை, கராபிட்டிய தேசிய வைத்தியசாலை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகளில் விசேடமாக சிறுவர்களின் பிறவிக் குறைபாடு நோய் தொடர்பில் உரிய சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

பிறக்கும் குழந்தைகளில் 30 பேரில் ஒருவருக்கு பிறவிக் குறைபாடு நோய் உள்ளது. அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பாரதூரமான பிறவிக் குறைபாடு நோய் காரணமாக குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படுவதுடன், அவர்களது குடும்பமும் பொருளாதாரம் உள்ளிட்ட பல சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படலாம்.

பிறவிக் குறைபாடு நோய்களில் 30 தொடக்கம் 3 வீதமானவை மரபணு குறைபாட்டால் ஏற்படும் நோய் நிலைமைகளாகும். குறிப்பாக இலங்கையில் டவுன் சிண்ட்ரோம் என்னும் மரபணு குறைபாட்டால் பாதிப்புக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பிறவிக்குறைபாடு மற்றும் ஊனக் குறைபாட்டுடன் கூடிய கரு கலைப்புக்கு இலங்கை அரசாங்கம் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. ஆகையால் திருமணமானவர்கள் வைத்திய பரிந்துரையின்படி கர்பகாலத்தை திட்டமிடுவது நல்லது.

நாட்டில் பிறவி குறைபாடு நோய்களை தடுப்பதற்கான வழிமுறைகளை உள்ளடக்கிய ஆய்வு அறிக்கையை பிறவி குறைபாடு நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம், அரசாங்கத்திடம் கையளித்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் அரசாங்கம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment