திருப்தியடையந்த பின்னரே குழு விடுவிப்பதற்கு தீர்மானித்தது - ஹர்ஷன சூரியப்பெரும - News View

About Us

About Us

Breaking

Thursday, February 6, 2025

திருப்தியடையந்த பின்னரே குழு விடுவிப்பதற்கு தீர்மானித்தது - ஹர்ஷன சூரியப்பெரும

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

கொள்கலன் நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு பரிசோதனைக்காக தெரிவு செய்யப்பட்ட கொள்கலன்களில் சில சிரேஷ்ட மற்றும் அனுபவமுள்ள அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றினால் விடுவிக்கப்பட்டுள்ளன. விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில் சட்டவிராேதமான பாெருட்களோ மனித பாவனைக்கு உதவாத பொருட்களோ இருக்க முடியாது என திருப்தியடைய முடிந்ததன் பின்னரே அந்த குழு அதனை விடுவிப்பதற்கு தீர்மானித்துள்ளது என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (06) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 27/2 இன் கீழ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து பதிலளித்து உரையாற்றுகையில், கொழும்பு துறைமுகத்தின் ஊடாக நாள் ஒன்றுக்கு 1600 கொள்கலன்கள் நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் கொள்கலன்களை பரிசோதனை செய்வதற்கு 3 பிரிவுகளே காணப்படுகின்றன.

அதன் மூலம் 500 கொள்கலன்கள் வரை பரிசோதனை செய்ய முடியுமான கொள்ளளவை கொண்டதாகும். இது போதுமானதல்ல. அதனால் கொள்கலன்களை பரிசோதனை செய்து விடுவிப்பதில் பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. என்றாலும், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

கொள்கலன்களை பரிசோதித்து விடுவிப்பதில் ஏற்படும் தாமதம் காரணமாக அந்த பொருட்களை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு ஏற்படுகின்ற மேலதிக செலவை கட்டுப்படுத்துவதற்காக கொள்கலன்களை விரைவாக பரிசோதித்து விடுவிப்பதற்கு சுங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அதன் ஒரு நடவடிக்கையாக சுங்க தரவு கட்டமைப்பு ஊடாக பரிசோதனைக்காக தெரிவு செய்யப்பட்ட கொள்கலன்களில் சில ஒழுங்கு விதிகளுக்கு அமைய, சிரேஷ்ட மற்றும் அனுபவமுள்ள அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றினால் தெரிவு செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளன.

இந்த முறைமையை இலங்கை சுங்கம் 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் பின்பற்றி வருகிறது. இந்த முறைமை இலங்கை சுங்கத்தின் சிரேஷ்ட முகாமையாளர் குழுவினாலே அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் பொருட்கள் விடுவிக்கப்படுவது பரிசோதனைக்கு பின்னரான கணக்காய்வு முறைமையின் கீழாகும். இது தொடர்பான ஏற்பாடுகள் சுங்க கட்டளைச் சட்டத்தில் காணப்படுகின்றன.

விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில் சட்டவிராேதமான பாெருட்களோ மனித பாவனைக்கு உதவாத பொருட்களோ இருக்க முடியாது என திருப்தியடைய முடிந்ததன் பின்னரே இந்த குழு அதனை விடுவிப்பதற்கு தீர்மானித்துள்ளது.

என்றாலும் இந்த சம்பவம் தொடர்பில் நிதி அமைச்சு, திறைசேரியின் பிரதி செயலாளர் ஒருவரின் தலைமையில் விசேட விசாரணை குழுவொன்றின் ஊடாக இது தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. விசாரணை முடிவடைந்த பின்னர் குழுவின் ஆய்வறிக்கையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க முடியும் என்றார்.

No comments:

Post a Comment