(எம்.வை.எம்.சியாம்)
திருடர்களுடன் எந்தவித தொடர்பும் இல்லை எனக் கூறிக் கொள்ளும் நாமே திருடர்களுடன் கூட்டணி அமைக்க வேண்டுமா எனக் கேள்வி எழுப்பியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவது எமது எதிர்கால அரசியல் பயணத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எதிர்காலத்தில் சுயாதீனமாகவும் கௌரவமாகவும் அரசியல் பயணத்தை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் திங்கட்கிழமை (10) இடம்பெற்ற வழக்கு விசாரணைக்காக வருகை தந்த அவரிடம் ஊடகவியலாளர்கள் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, 'அரகலய'வின்போது தமது சொத்துக்கள் சேதமாக்கப்பட்டதாகத் தெரிவித்து நட்டயீடு பெற்றுக் கொண்டவர்களின் பெயர் பட்டியல் ஒன்று அண்மையில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் வெளியிடப்பட்டது. அந்த நிதியினை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே வழங்கியுள்ளார். நாம் திருடர்களுடன் கூட்டு சேர மாட்டோம் எனக்கூறியிருந்தோம். இவ்வாறான பின்னணியில் இந்த திருடர்களுடன் இணைய வேண்டுமா? ரணிலுடனோ அல்லது அவரது கட்சியில் உள்ளவர்களுடனோ இணைந்து எமது அரசியல் பயணத்தை முன்னோக்கி கொண்டு செல்ல முடியுமா?
இரு கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து கதைத்துக் கொள்கிறார்கள். அது தொடர்பில் விமர்சிக்க நாம் விரும்பவில்லை. ஆனால் நாம் கட்சியின் உறுப்பினர்கள். மக்கள் எம்மிடத்தில் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் அல்லவா?
எனவே இந்த கட்சிகள் இணையுமாயின் புதிய கூட்டணியின் தலைமை பதவி சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்பட வேண்டும். அதேபோன்று நாம் தொலைபேசி சின்னத்திலேயே களமிறங்க வேண்டும். ஆனால் அதற்கு அவர்கள் விரும்ப மாட்டார்கள்.
நாம் அவர்களின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டுமா? ஐக்கிய மக்கள் சக்தி நாட்டின் பிரதான எதிர்க்கட்சி. 40 க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள கட்சி. எனவே நாம் அடி பணிந்து செல்ல வேண்டுமா? சுயாதீனமாகவும் கௌரவமாகவும் நாம் எமது பயணத்தை முன்னெடுக்க வேண்டும்.
அதேபோன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு பெரும்பான்மை பலத்தை வழங்கிய மக்கள் தற்போது அதிருப்தி அடைந்துள்ளனர். நாட்டில் அரிசி தட்டுப்பாடு. நெல்லுக்கு போதுமான நிர்ணய விலை வழங்கப்படவில்லை. உப்பு இறக்குமதி செய்யப்படுகிறது.
ஞாயிற்றக்கிழமை (9) காலை குரங்குகளின் சேட்டையாலேயே நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டதாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் கூறியிருந்தார். பின்னர் அவர் கடந்த காலங்களில் மின் கட்டமைப்பு முறைமை முறையாக பராமரிக்கப்படவில்லை என்பதாலேயே மின் தடை ஏற்பட்டதாக மாலை ஊடகங்களுக்கு அறிவிக்கிறார். அவர் ஒரு பொறியியலாளர்.
ஆனால் பாதுகாப்பு அதிகாரி குரங்குகளால் சேதம் ஏற்படவில்லை எனக்கூறுகிறார். அமைச்சர் ஒருவர் இவ்வாறு பொறுப்பற்ற வகையில் நடந்து கொள்ள முடியுமா ?
எனவே இந்த நாட்டை மேம்படுத்தவே மக்கள் அதிகாரத்தை வழங்கியுள்ளார்கள். இன்னும் எதிர்க்கட்சிகளை குறைக்கூறிக் கொண்டிருக்காமல் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என நாம் கூறியிருந்தோம். அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் கூட ஆகவில்லை. தற்போதே ஆட்டம் காண ஆரம்பித்து விட்டது என்றார்.
No comments:
Post a Comment