உண்மையான குற்றவாளிகளை இனங்கண்டு தண்டனை வழங்குங்கள் : அரசாங்கம் பேச்சை குறைத்து செயலில் தமது இயலுமையை காட்ட வேண்டும் - ஜானக வக்கம்புர - News View

About Us

About Us

Breaking

Sunday, February 9, 2025

உண்மையான குற்றவாளிகளை இனங்கண்டு தண்டனை வழங்குங்கள் : அரசாங்கம் பேச்சை குறைத்து செயலில் தமது இயலுமையை காட்ட வேண்டும் - ஜானக வக்கம்புர

(எம்.மனோசித்ரா)

லசந்த விக்கிரமதுங்கவை கொலை செய்தவர்கள் யார் என்பதை இனங்கண்டு அவர்களுக்கு தண்டனை வழங்குவதை விடுத்து, ஒரு சிலரை முன்னிலைப்படுத்தி ஏனையோர் மீது குற்றஞ்சாட்டுவதை நிறுத்த வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜானக வக்கம்புர தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பில் அன்று வீதியிலிருந்து கூச்சலிட்டவர்களுக்கு இன்று அதிகாரம் இருக்கிறது. எனவே அந்தக் கொலையுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டியது தற்போதைய அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

லசந்த விக்கிரமதுங்கவை கொலை செய்தவர்கள் யார் என்பதை இனங்கண்டு அவர்களுக்கு தண்டனை வழங்குவதை விடுத்து, ஒரு சிலரை முன்னிலைப்படுத்தி ஏனையோர் மீது குற்றஞ்சாட்டுவதை நிறுத்த வேண்டும்.

எமது ஆட்சிக் காலத்தில் சட்டமா அதிபரிடம் ஏதேனும் விளக்கம் கோரினால் நீதித்துறை மீது அச்சுறுத்தல் விடுப்பதாக இவர்கள் கடுமையாக விமர்சித்தனர். ஆனால் தற்போதைய ஜனாதிபதி பகிரங்கமாக சட்டமா அதிபரை அச்சுறுத்தும்போது அமைதியாக இருக்கின்றனர்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை உபயோகித்து கொலைக் குற்றங்களுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்குமாறும் வலியுறுத்துகின்றோம்.

ஊழல் மோசடியாளர்கள், கொலைக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என ஒருபோதும் நாம் கூறப் போவதில்லை.

ஆனால் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அதனை விடுத்து அரசியல் பழிவாங்கலுக்காக நிரபராதிகள் தண்டிக்கப்படக்கூடாது.

தற்போது அரசாங்கத்துக்கு எதிராக உண்மைகளை வெளிப்படுத்தும்போது அவற்றை மறைப்பதற்கு பாராளுமன்றத்தில் வேறு விடயங்களை முன்வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

நெல் பிரச்சினையை திசை திருப்புவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லம் தொடர்பில் பாரிய பிரசாரங்களை முன்னெடுத்தனர். தற்போது இழப்பீடுகளைப் பெற்றுக் கொண்டவர்களது பட்டியலை வெளியிட்டு அதனை பேசு பொருளாக்கியுள்ளனர்.

அன்று எரிபொருளுக்கு வரி அறவிடப்படுவதாகவும் அதனை காஞ்சன விஜேசேகரவே பெற்றுக் கொள்வதாகவும் கூறினர். ஆனால் இன்று அதுகுறித்து யாரும் எதுவும் பேசுவதில்லை. எனவே அரசாங்கம் பேச்சைக் குறைத்து செயலில் தமது இயலுமையை காண்பிக்க முயற்சிக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment