(எம்.வை.எம்.சியாம்)
2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் ஏற்பட்ட வன்முறையின்போது தமது வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதாக தெரிவித்து 43 பாராளுமன்ற உறுப்பினர்கள் 122 கோடி ரூபா இழப்பீடு பெற்றுக் கொண்டமை தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இலஞ்சம் ஊழல் மற்றும் வீண்விரயத்துக்கு எதிரான பிரஜைகள் சக்தி அமைப்பின் தலைவர் ஜனாமுனி காமந்த துஷாரவினால் இந்த முறைப்பாடு சனிக்கிழமை (08) பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நாட்டு பிரஜை ஒருவரின் சொத்து தீயிட்டு எரிக்கப்படுமாயின் அதனை செய்தவர்களை தேடிப்பார்த்து அதன் பின்னர் நீதிமன்றத்துக்கு சென்றுதான் நட்டயீட்டை பெற்றுக் கொள்ள முடியும்.
அதேபோன்று அந்த சொத்துக்களுக்கு காப்புறுதி அளிக்கப்பட்டிருந்தால் அதன் மதிப்பு அளவீடு செய்த பின்னரே காப்புறுதி நிறுவனம் அதனை வழங்கும். ஆனால் இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களுக்கு கிடைக்காத சலுகைகளை பயன்படுத்தி அவர்கள நட்டயீட்டைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
அறவழி போராட்டத்தின்போது அழிக்கப்பட்ட பொதுமக்கள் சொத்துக்கள், வீடுகள், பஸ்கள் எரிக்கப்பட்டபோது எந்தவித நட்டயீடும் வழங்கப்படவில்லை. எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து வீடுகள் தீக்கிரையாகின. அவர்களுக்கும் நட்டயீடு வழங்கப்படவில்லை.
தாங்களே அமைச்சரவையில் இருந்து தங்களுக்கு இடையிலேயே அதனை பகிர்ந்து கொள்வது நியாயமான விடயமா? இயற்கை அனர்த்தங்களால் வீடுகள் அழிவடைந்தன. ஆனால் நட்டயீடு வழங்கப்படவில்லை.
எனவே இது தொடர்பில் நாம் குற்றப் புலானய்வுத் திணைக்களத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளோம்.
மக்களின் பிரச்சினைகளை சமூகமயப்படுத்த வேண்டும் என இந்த அரசாங்கத்திடம் கூறிக் கொள்கிறோம். நாம் அது தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்வோம். ஆனால் அதனை மேற்கொள்வதற்கான சட்டங்கள் நாட்டில் இல்லையென்றால் சட்டங்களை உருவாக்குங்கள்.
நாம் 159 பேருக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளோம். நாட்டு மக்களின் சொத்துக்களை கொள்ளையடித்தவர்களுக்கு எதிராக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையில் இந்த வீடுகளுக்கு ஆர்ப்பாட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்டதா? அல்லது அவர்களே வேண்டும் என்று தீ வைத்துக் கொண்டார்களா என்ற சந்தேகம் எமக்குள்ளது. எனவே இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுங்கள் என்றார்.
No comments:
Post a Comment