கொழும்பு கிரிஷ் கட்டத்தில் இரு வேறு சந்தர்ப்பங்களில் ஏற்பட்ட தீப்பரவல் அதன் ஊழியர்களால் இரும்புகளை வெட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் கேஸ் கட்டர் காரணமாக இடம் பெற்றிருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும் இது குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மற்றும் கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவிக்கின்றது.
கடந்த 6 ஆம் திகதி பிற்பகல் கொழும்பு கோட்டை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கிரிஷ் கட்டிடத்தின் 35 ஆவது மாடியில் தீப்பரவல் ஏற்பட்டதுடன் 34 ஆவது மாடி வரை தீ பரவியிருந்தது. பல மணித்தியால போராட்டத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை (7) குறித்த கட்டிடத்தின் 24 ஆவது மாடியிலும் இரண்டாவது நாளாக தீப் பரவல் ஏற்பட்டதுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
அதற்காக 06 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. இதனையடுத்து குறித்த சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதற்கமைய மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் கட்டிடத்தில் இரண்டு சந்தர்ப்பங்களில் ஏற்பட்ட தீப் பரவல் அதன் ஊழியர்களால் இரும்புகளை வெட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் கேஸ் கட்டர் காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் விடயங்களை அறிந்து கொள்வதற்காக அந்த நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளுக்காக 2 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
அத்துடன் கட்டிடத்தை அண்மித்து தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் இதற்காக 20 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் இத்தீப் பரவல் தொடர்பில் அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் இது குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மற்றும் கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவிக்கின்றது.
No comments:
Post a Comment