போர் நிறுத்த உடன்படிக்கையை இஸ்ரேல் மீறியதாக குற்றம்சாட்டி இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிப்பதை ஹமாஸ் அமைப்பு ஒத்திவைத்ததை அடுத்து பணயக் கைதிகளை மீட்பதற்கு ‘உக்கிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்திருப்பதோடு பயணக் கைதிகள் அனைவரையும் விடுவிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கெடு விதித்து அச்சுறுத்தியுள்ளார்.
எனினும் பணயக் கைதிகளை விடுவிப்பதற்கு போர் நிறுத்தமே ஒரே வழி என பதிலளித்திருக்கும் ஹமாஸ் அமைப்பு டிரம்பின் அச்சுறுத்தலையும் நிராகரித்துள்ளது.
மறுபுறம் ஹமாஸின் அறிவிப்பை அடுத்து இஸ்ரேலிய துருப்புகள் வெளியேறுவதை ரத்துச் செய்து காசாவை சூழ படைகளை அதிகரித்திருப்பதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
காசாவில் இடம்பெற்றுவரும் முதலாம் கட்ட போர் நிறுத்தத்தின் அடுத்த கட்டமாக எதிர்வரும் சனிக்கிழமை (15) பலஸ்தீன கைதிகளுக்கு பகரமாக மேலும் மூன்று இஸ்ரேலிய பணயக் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டி உள்ளது. எனினும் இதனை ஹமாஸ் ஒத்திவைத்திருப்பதோடு இந்த பலவீனமான போர் நிறுத்தத்தை தொடர்வதில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேலின் போர் நிறுத்த மீறல்கள் போர் நிறுத்தத்தை தொடர்ந்து கடைப்பிடிக்க முடியாத கட்டத்தை எட்டி இருப்பதாக குறிப்பிட்டே பணயக் கைதிகளை விடுவிப்பதை ஹமாஸ் ஒத்திவைத்துள்ளது.
வடக்கு காசாவுக்கு இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் திரும்புவதை தாமதப்படுத்தும் வகையில் இஸ்ரேல் சூடு நடத்துவதாகவும் இணங்கிய மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க தவறி வருவதாகவும் ஹமாஸ் பேச்சாளர் அபூ ஒபைதா தெரிவித்துள்ளார்.
காசாவில் இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு மத்தியிலும் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதோடு கடந்த ஞாயிறன்று இஸ்ரேலின் துப்பாக்கிச் சூட்டில் மூன்று பலஸ்தீனர்கள் கொல்லப்பட்ட நிலையில் நேற்று ரபா நகரில் மேலும் ஒரு பலஸ்தீன இளைஞர் கொல்லப்பட்டார்.
இந்நிலையில் இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியான ட்ரம்ப் ஹமாஸ் அமைப்பு பணயக் கைதிகளை விடுவிக்க கெடு விதித்துள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து பணயக் கைதிகளையும் எதிர்வரும் சனிக்கிழமை நண்பகளுக்குள் விடுவிக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார். இல்லாவிட்டால் இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்தை ரத்துச் செய்ய பரிந்துரைத்துள்ளார்.
மறுபுறம் அனைத்து பணயக் கைதிகளையும் மீட்பதில் உறுதியாக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
‘எமது அனைத்து பணக் கைதிகளையும் திரும்பப் பெறும் வரையில் நாம் உறுதியான மற்றும் உக்கிர நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வோம்’ என்று அவர் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நீடித்த போரைத் தொடர்ந்தே கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் திகதி காசாவில் போர் நிறுத்தம் எட்டப்பட்டது. எனினும் பெரும் சந்தேகங்களுடன் தொடரும் இந்தப் போர் நிறுத்தத்தை டிரம்பின் கருத்துகளும் பலவீனப்படுத்துவதாக இருந்தது.
காசாவில் உள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றி அந்தப் பகுதியை அமெரிக்கா கைப்பற்றப்போவதான அவரது கருத்து முழு மத்திய கிழக்கிலும் எதிர்ப்புக்கு காரணமானதோடு சர்வதேச அளவில் கடும் கண்டனத்திற்கு உள்ளானது.
எனினும் பணயக் கைதிகளை விடுவிப்பது ஒத்திவைக்கப்பட்டதற்கு டிரம்பின் நிலைப்பாடு தொடர்பில் ஹமாஸ் எந்த கருத்தையும் வெளியிடவில்லை.
ஆனால் பணயக் கைதிகளை மீட்பதற்கு போர் நிறுத்தம் மாத்திரமே ஒரே வழி என்று ஹமாஸ் குறிப்பிட்டது.
‘இரு தரப்பும் மதிக்க வேண்டிய உடன்படிக்கை ஒன்று இருப்பதை ட்ரம்ப் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும். (இஸ்ரேலிய) கைதிகளை மீட்பதற்கு இது மாத்திரமே ஒரே வழி. எச்சரிக்கும் வார்த்தை பிரயோகங்களுக்கு எந்த மதிப்பும் இல்லை என்பதோடு அது பிரச்சினையை மேலும் சிக்கலாக்குவதையே செய்யும்’ என்று ஹமாஸ் மூத்த அதிகாரி சமி அபூ சுஹ்ரி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.
காசா தொடர்பில் டிரம்பின் திட்டம் பெரும் முறுகலை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அவர் நேற்று ஜோர்தான் மன்னர் அப்துல்லாவை வெள்ளை மாளிகையில் சந்தித்தார். இதன்போது டிரம்பின் திட்டத்திற்கு இணங்குவதற்கு எந்த வகையிலும் முடியாது என்று மன்னர் அப்துல்லா நிராகரித்தார்.
இதனை மறுத்தால் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று எச்சரித்திருக்கும் ட்ரம்ப் எகிப்துடன் சேர்த்து ஜோர்தானுக்கான அமெரிக்க உதவிகளை நிறுத்தி வைக்க வேண்டி ஏற்படும் என்றும் குறிப்பிட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவிடம் இருந்து ஜோர்தான் ஆண்டுக்கு 1.45 பில்லியன் டொலர் இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனினும் 1949 ஜெனிவா உடன்படிக்கையில் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது போர் குற்றமாக தடை செய்யப்பட்டுள்ளது. மன்னர் அப்துல்லாவும் டிரம்பிடம் இதனை வலியுறுத்தியுள்ளார்.
1948 இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் வெளியேற்றப்பட்டது போன்ற நிலை குறித்து காசா மக்கள் அஞ்சி வருகின்றனர்.
‘ஹமாஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்க வேண்டும். மின்சாரம் மற்றும் நீரை துண்டித்து, மனிதாபிமான உதவிகள் நிறுத்தப்பட வேண்டும். நரகத்தின் வாயில் திறக்கப்பட வேண்டும்’ என்று இஸ்ரேலின் தீவிர வலதுசாரி நிதி அமைச்சர் பென்சலல் ஸ்மொட்ரிச் ஊடக மாநாடு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment