நாட்டில் தொடரும் யானை - மனிதன் மோதல்களுக்கு நிரந்தர மற்றும் விஞ்ஞானபூர்வமான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) இடம்பெற்ற வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தில் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. ஸ்ரீநேசன் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்
அவர் அங்கு மேலும் கூறுகையில், 2021 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையான நான்கு வருட காலப்பகுதியில் காட்டு யானைகள் தாக்கியதில் 1578 மனிதர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 739 பேர் மரணமடைந்துள்ளனர்.
அத்துடன் யானை - மனிதன் மோதல் காரணமாக இந்த நான்கு வருடங்களுக்குள் 2018 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் அமைச்சர் சபையில் தெரிவித்தார்.
மின்சார வேலிகளை அமைத்தல், யானைகள் உள்வரும் பகுதிகளில் காவலரண்களை உருவாக்கி யானைகளை துரத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்தல், யானைகள் செல்லும் வழிகளை இனங்கண்டு முறையாக அதனை அமைத்து அவற்றுக்கு வாய்ப்பளித்தல், யானை - மனிதன் மோதல்களை தடுப்பதற்கு தேவையான பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றை பின்பற்றுவதன் மூலம் யானைகளால் எதிர்கொள்ள நேரும் பாதிப்புகளையும் அழிவுகளையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment