(எம்.மனோசித்ரா)
யுத்த காலத்தில் கூட மஹிந்த ராஜபக்ஷவுக்கு விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் காணப்படவில்லை. அவ்வாறிருகையில் தற்போது அவரது பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதில் எவ்வித சிக்கலும் இல்லை. பிரபாகரன் உள்ளிட்டோர் தப்பிச் செல்ல வேண்டும் என்பதற்காகவே 2009 இல் மஹிந்த ராஜபக்ஷ போர் நிறுத்தத்தை அறிவித்தார் என பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
வியாழக்கிழமை (2) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கூட மஹிந்த ராஜபக்ஷவுக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படவில்லை. பயங்கரவாதிகள் கூட அவர் மீது குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளவோ துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்ளவோ முயற்சிக்கவும் இல்லை. மஹிந்த ராஜபக்ஷ தனித்து சென்று போரை நிறுத்தினாரா? நாம் போரில் பங்கேற்கவில்லையா?
யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்த இராணுவத் தளபதியான எனது பாதுகாப்பு 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே முழுமையாக நீக்கப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் எனக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் காணப்படவில்லையா?
என்னை வெலிக்கடை சிறையிலடைத்தபோது அங்கும் விடுதலைப் புலிகள் இருந்தனர். அதற்காக வெலிக்கடை சிறைச்சாலையில் எனக்கு மேலதிக பாதுகாப்பு வழங்கப்பட்டதா?
சிறைச்சாலையிலிருந்து என்னை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றபோது, அங்கிருந்த கதிரையில் நானும், என் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்ட பயங்கரவாதியொருவரும் ஒன்றாகவே அமர்ந்திருந்தோம்.
அந்த வகையில் மஹிந்த ராஜபக்ஷ மீது ஒருபோதும் பயங்கரவாதிகள் தாக்குதல்கள் நடத்தப்போவதுமில்லை.
2005ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டபோது பிரபாகரனுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதாகக் கூறினார். அத்தோடு யுத்தத்தை நான் அனுமதிக்க மாட்டேன். யுத்தத்தின் மூலம் தீர்வு காண முடியாது என்பதே மஹிந்த ராஜபக்ஷ சிந்தனையில் காணப்பட்டது.
எனவே விடுதலைப் புலிகளுக்கு மஹிந்த ராஜபக்ஷ மீது எந்த கோபமும் இல்லை. 2005 இல் விடுதலைப் புலிகளுக்கு தற்கொலை குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு அவர் பணமும் வழங்கியிருக்கின்றார்.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு விடுதலைப் புலிகளுடன் ஆழமான தொடர்பு காணப்பட்டது. நாம் வேண்டாமென தடுத்த போதிலும் 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ போர் நிறுத்தத்தை அறிவித்தார்.
இதன்போது இராணுவத்தின் மீது கடுமையான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. பிரபாகரன் உள்ளிட்டவர்கள் தப்பிச் செல்ல வேண்டும் என்பதற்காகவே அவர் போர் நிறுத்தத்தை அறிவித்தார் என்றார்.
No comments:
Post a Comment