வாகனங்களை இறக்குமதி செய்தால் மீண்டும் வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறை ஏற்படும் - சிரேஷ்ட பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, January 13, 2025

வாகனங்களை இறக்குமதி செய்தால் மீண்டும் வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறை ஏற்படும் - சிரேஷ்ட பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவிப்பு

(இராஜதுரை ஹஷான்)

வங்கி கடனுக்கான வடடி வீதம் குறைவாக காணப்படுகின்ற நிலையில் முறையான திட்டமிடல் இன்றி, தூரநோக்கற்ற வகையில் வாகனங்களை இறக்குமதி செய்தால் மீண்டும் வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறை ஏற்படும். அது பொருளாதாரத்துக்கு சாதகமாக அமையாது என வாகன இறக்குமதி தொடர்பில் பேராதனை பல்கலைக்கழகத்தில் பொருளாதார துறையின் சிரேஷ்ட பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்தார்.

பொருளாதார பாதிப்பு மத்தியில் வெளிநாட்டு கையிருப்பு வரையறுக்கப்பட்டதைத் தொடர்ந்து வாகன இறக்குமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் ஒத்துழைப்பு உத்தரவாதம், வெளிநாட்டு கையிருப்பு ஸ்திரப்படுத்தல் ஆகிய சாதகமான காரணிகளை அடிப்படையாகக் கொண்டு மூன்று கட்டமாக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இலங்கை மத்திய வங்கி அனுமதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கும் வகையில் வாகன இறக்குமதி வரி ஞாயிற்றுக்கிழமை (12) முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

உற்பத்தி தினத்தில் இருந்து 10 ஆண்டுகளுக்கு மேற்படாக செயற்திறன் காலத்தைக் கொண்டுள்ள வாகனங்களுக்கு 200 முதல் 300 சதவீதமளவில் வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில் வாகனங்களின் கொள்வனவு விலை நூற்றுக்கு 20 சதவீதமளவில் உயர்வடையும் என தொழிற்றுறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வாகன இறக்குமதி முறையான திட்டமிடலுக்கமைய ஒழுங்கமைக்கப்படாவிடின் மீண்டும் வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறை தோற்றம் பெறும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வாகன இறக்குமதி தொடர்பில் பேராதனை பல்கலைக்கழகத்தில் பொருளாதார துறையின் சிரேஷ்ட பேராசிரியர் வசந்த அதுகோரல குறிப்பிடுகையில், புதிய வரித் திருத்தத்துக்கு அமைய வாகனத்தின் கொள்வனவு விலை உயர்வடையுமா என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் காணப்படுகிறது.

பாரியதொரு மாற்றம் ஏற்படும் என்று குறிப்பிட முடியாது. ஏனெனில் வாகன இறக்குமதியின்போது கடந்த காலங்களில் அமுல்படுத்தப்பட்ட வரி கொள்கைக்கு அமைவாகவே வரி திருத்தம் செய்யப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இலங்கையின் சந்தையில் தனித்த விலை காணப்படுகிறது.

2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இறக்குமதி செலவு 20 பில்லியனை காட்டிலும் அதிகளவில் காணப்பட்டது.

வட்டி வீதம் மிகவும் குறைவான மட்டத்தில் காணப்பட்டமை அதற்கு பிரதான காரணியாகும். நாட்டில் மீண்டும் அவ்வாறான நிலை தோற்றம் பெற்றுள்ளது. வட்டி வீதம் மிகவும் குறைவான மட்டத்தில் காணப்படுகிறது.

நாட்டின் தேவையைக் கருத்திற் கொள்ளாமல் வாகன இறக்குமதிக்கு அனைவருக்கும் வாய்ப்பளித்தால் பெருமளவானோர் கடன் பெற்று வாகனங்களை இறக்குமதி செய்ய முற்படுவார்கள். அதனால் வெளிநாட்டு கையிருப்பு நாட்டை விட்டு வெளியேறும். இறக்குமதி செலவு உயர்வடையும். இவ்வாறான செயற்பாடுகள் பொருளாதாரத்துக்குச் சாதகமானதாக அமையாது.

இறக்குமதி செலவுகளை இயலுமான அளவில் குறைத்துக்கொண்டு ஏற்றுமதிகளை அதிகரித்துக்கொண்டு பண்ட கணக்குகளின் துறைகளை நிலையான தன்மையில் பேண வேண்டும். வாகன இறக்குமதி செலவு உயர்வடைந்தால் மத்திய வங்கியின் வெளிநாட்டு கையிருப்பில் பற்றாக்குறை ஏற்படும்.

பொருளாதார பாதிப்பில் காரணமாகவே வாகன இறக்குமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. ஆகவே வாகன இறக்குமதி திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும். இல்லையேல் மீண்டும் பொருளாதார நெருக்கடி தோற்றம் பெறும் என்றார்.

No comments:

Post a Comment