மஹிந்த ராஜபக்ஷவை கொல்ல வேண்டிய தேவை யாருக்கு இருக்கிறது? - கேள்வியெழுப்பியுள்ள விக்னேஸ்வரன் - News View

About Us

About Us

Breaking

Saturday, January 4, 2025

மஹிந்த ராஜபக்ஷவை கொல்ல வேண்டிய தேவை யாருக்கு இருக்கிறது? - கேள்வியெழுப்பியுள்ள விக்னேஸ்வரன்

(நா.தனுஜா)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொல்ல வேண்டிய தேவை யாருக்கு இருக்கிறது? தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதாக மஹிந்த ராஜபக்ஷ தரப்பு ஏற்கனவே அறிவித்துவிட்டது. அவ்வாறிருக்கையில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு யாரிடமிருந்து பாதுகாப்பு தேவைப்படுகிறது? அவரது மெதமுலான உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்தா? எனக் கேள்வி எழுப்பியிருக்கும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கு நன்கு பயிற்றப்பட்ட 6 பொலிஸ் அதிகாரிகளே போதுமானவர்கள் எனத் தெரிவித்துள்ளார்.

வாராந்த கேள்வி - பதில் பகுதியின் ஊடாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கும் சி.வி.விக்னேஸ்வரன், இதுபற்றி மேலும் கூறியிருப்பதாவது,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கான அதியுயர் பாதுகாப்பின் அவசியத்தன்மை குறித்து சரத் பொன்சேகா ஏற்கனவே கேள்வி எழுப்பியிருந்தார். மஹிந்த ராஜபக்ஷவுக்கு அத்தகைய உயர் பாதுகாப்பு அவசியமற்றதாகும்.

1988 - 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பதுளை மேல் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகித்த நான், நீதிபதிகளுக்கான உத்தியோகபூர்வ இல்லத்தில் வசித்தபோது எனக்கான பாதுகாப்புசார் தேவைப்பாடுகள் என்னவென்பது பற்றி அரசாங்கம் என்னிடம் வினவியது.

அவ்வேளையில் அதிக எண்ணிக்கையான பொலிஸ் உத்தியோகத்தர்களை உள்ளடக்கிய பாதுகாப்புப் பிரிவை நான் கோரியிருக்கலாம். இருப்பினும் நான் எனது பாதுகாப்புக்கு யாரும் தேவையில்லை என நிராகரித்துவிட்டேன்.

ஏனெனில் எனது உத்தியோகபூர்வ இல்லத்துக்கு முன்பாக பாதுகாப்பு அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்துவதன் ஊடாக நானே அநாவசியமான பிரச்சினைகளை வரவழைக்க நேரிடும் என்பதே எனது நிலைப்பாடாக இருந்தது.

என்னுடைய இல்லத்துக்கு முன்பாக ஆயுதமேந்திய பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பின், ஜே.வி.பி கலகக்காரர்கள் அங்கு வந்து பொலிஸாரைத் தாக்கி, அவர்கள் வசமிருந்த ஆயுதங்களை கைப்பற்றுவதற்கான வாய்ப்புண்டு. எனவே பாதுகாப்பு பிரிவினர் இல்லாதிருந்தால், பிரச்சினைகளும் இருக்காது எனக் கருதினேன்.

எனவே மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கு நன்றாகப் பயிற்றுவிக்கப்பட்ட 6 பொலிஸ் அதிகாரிகளே போதுமானவர்கள் என்பதே எனது கருத்தாகும். மஹிந்த ராஜபக்ஷவை கொல்ல வேண்டிய தேவை யாருக்கு இருக்கிறது?

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பல கொலைகள் அரசியல்வாதிகளால் நிகழ்த்தப்பட்டிருந்தாலும், அது குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் மீதே பழிசுமத்தப்பட்டது. இருப்பினும் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுவிட்டதாக மஹிந்த ராஜபக்ஷ தரப்பு ஏற்கனவே அறிவித்துவிட்டது.

அவ்வாறிருக்கையில் மஹிந்த ராஜபக்ஷ வுக்கு யாரிடமிருந்து பாதுகாப்பு தேவைப்படுகிறது? அவரது மெதமுலான உறவினர்கள், நண்பர்களிடமிருந்தா? மஹிந்த ராஜபக்ஷவோ அல்லது அவரது கட்சியினரோ அவரின் (மஹிந்தவின்) பெறுமதியை உண்மையைக் காட்டிலும் உயர்வாக மதிப்பிடக்கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment