தலாவ பகுதியில் இன்று சனிக்கிழமை (01) அதிகாலை ஒரு மணியளவில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவிற்கு சொந்தமான டிஃபென்டர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று வியாழக்கிழமை (31) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கொழும்புக்குத் திரும்பும்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
அதன்படி, விபத்தில் காயமடைந்தவர்கள் அவர்களுடன் வந்த மற்றொரு வாகனத்தில் தலாவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை மோசமாக உள்ளதால், அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அனுராதபுரம் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்களில் சாரதி ஜனாதிபதி செயலகத்தில் கடமையாற்றுபவர் என்றும், மற்றவர்கள் இலங்கை பொலிஸில் பணி புரியும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தலாவ பொலிஸார் மெற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment