(இராஜதுரை ஹஷான்)
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ள விடயங்கள் முற்றிலும் தவறானவை. ஜனாதிபதி இவ்வாறான கீழ் நிலைக்கு செல்வார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நாட்டு மக்களும் இதனை எதிர்பார்க்கவில்லை. ஜனாதிபதி பதவிக்குரிய கௌரவத்துடன் செயற்பட வேண்டும் என்பதை அவருக்கு நினைவுப்படுத்துகிறோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குணபால ரத்னசேகர தெரிவித்தார்.
கொழும்பில் வெள்ளிக்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் நாட்டு மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கினார். மக்களும் அதனை ஏற்றுக் கொண்டு அவருக்கு ஆணை வழங்கினார்கள்.
புதிய அரசாங்கம் மக்களின் எதிர்பார்ப்புக்கமைய செயற்படும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் எவ்வித கருத்தையும் நாங்கள் குறிப்பிடவில்லை.
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் மற்றும் சலுகைகள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைக்கு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவ பாதுகாப்பு முழுமையாக குறைக்கப்பட்டு 60 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மாத்திரம் வழங்கப்பட்டுள்ளனர். இதனையும் மக்கள் பெரிதுப்படுத்தவில்லை. நாங்களும் பெரிதுப்படுத்தவில்லை.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தினால் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்கு அதிக கவனம் செலுத்த தேவையில்லை என்று அரசாங்கம் குறிப்பிட்டது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த வாரம் களுத்துறை பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு ஆற்றிய உரையில் முன்னாள் ஜனாதிபதிகள் தொடர்பில் குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்பில் குறிப்பிட்ட விடயங்கள் முற்றிலும் தவறானது.
ஜனாதிபதி இவ்வாறு கீழ் நிலைக்கு செல்வார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இதன் பின்னரும் நாங்கள் அமைதியாக இருந்தால் நாங்களும் நன்றியில்லாதவர்களாக கருதப்படுவோம்.
மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து எமக்கு எவ்வித தனிப்பட்ட சலுகைகளும், வரப்பிரசாதங்களும் கிடைக்கவில்லை. இருப்பினும் உயிர் வாழும் உரிமையை அவர்தான் உறுதிப்படுத்தினார் . அந்த நன்றிக்காகவே தற்போது பேசுகிறோம்.
ஜனாதிபதி தனது உரையில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 60 பொலிஸார் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டுள்ளனர். அமைதியாக இருக்க வேண்டும். திணறினால் அதுவும் குறைக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இது முற்றிலும் தவறானதொரு கருத்தாகும்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த காலங்களில் தேர்தல் பிரச்சார மேடைகளில் பேசியதை போன்று தற்போதும் பேசுகிறார். ஜனாதிபதி பதவிக்கான கௌரவத்துக்கமைய அவர் செயற்பட வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே 30 ஆண்டு கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து நாட்டை ஒருமுகப்படுத்தினார். யுத்த கால சூழல் எவ்வாறு இருந்தது என்பதை எவராலும் மறக்க முடியாது.
மஹிந்த ராஜபக்ஷவின் பிற்பட்ட நிர்வாகத்தில் குறைபாடுகள் காணப்பட்டதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அவர் மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் காணப்படுகிறது. அவற்றை அரசாங்கம் சட்டத்தின் பிரகாரம் விசாரித்து நடவடிக்கை எடுக்கலாம்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு இன்றும் எதிரிகள் சர்வதேச மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் உள்ளார்கள். அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு.
மாற்றத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுக்கொண்டு தவறான வகையில் செயல்படுவதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment