அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கான சலுகைகள் ! வெளியிடப்பட்டுள்ள விசேட சுற்றுநிரூபம் - News View

About Us

About Us

Breaking

Saturday, January 25, 2025

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கான சலுகைகள் ! வெளியிடப்பட்டுள்ள விசேட சுற்றுநிரூபம்

(எம்.மனோசித்ரா)

அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கான வாகனங்கள், எரிபொருள், தொலைபேசி மற்றும் ஏனைய சலுகைகள் தொடர்பில் ஜனாதிபதி செயலாளர் என்.எஸ். குமாரநாயக்கவினால் விசேட சுற்று நிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த சுற்றுநிரூபத்தில் செயலாளர்கள் உட்பட ஏனைய உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கான வரையறைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் தமது அரச கடமைகளுக்காக ஆகக்கூடியது இரு உத்தியோகபூர்வ வாகனங்களை மாத்திரமே பயன்படுத்த முடியும். அந்த வாகனங்களுக்காக மாதாந்தம் 900 லீற்றர் எரிபொருள் ஒதுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு இரு அலுவலக தொலைபேசிகள், ஒரு வீடு, ஒரு கையடக்க தொலைபேசி மற்றும் ஒரு தொலைநகல் இயந்திரம் என்பவை மாத்திரமே அரசாங்கத்தின் செலவில் வழங்கப்படும்.

அதற்கமைய அலுவலக மற்றும் வீட்டு தொலைபேசிக்காக 20,000 ரூபா அதிகபட்ச கொடுப்பனவும், கையடக்க தொலைபேசிக்காக அதிபட்சம் 10,000 ரூபா கொடுப்பனவும் வழங்கப்படும்.

அதேபோன்று கொள்கை திட்டமிடலுக்கான ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்காக சுயாதீனமாக ஆலோசகர் ஒருவரை அல்லது குழுவொன்றை நியமித்துக் கொள்ள முடியும். அவர்கள் குறித்த விடயத்தில் நிபுணத்துவமும் அனுபவமும் உடையவர்களாக இருக்க வேண்டும்.

இவ்வாறு எந்தவொரு பதவிக்கும் அமைச்சர்கள் அல்லது பிரதி அமைச்சர்கள் தமது உறவினர்களை நியமிக்க முடியாது.

குறித்த ஆலோசகர்களுக்கான கொடுப்பனவுகள் அவர்களது தகைமைகளை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படும். அத்தோடு அவை பொது நிர்வாக சுற்றுநிரூபத்துக்கு அமையவே தீர்மானிக்கப்படும்.

இவற்றுக்கு அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் தமது அலுவலகப் பணிகளுக்காக செயலாளர்கள் உட்பட 15 உத்தியோகத்தர்களையும், பிரதி அமைச்சர்களும் அதேபோன்று 12 உத்தியோகத்தர்களையும் நியமிக்க முடியும்.

இந்த வரையறைகள் கடந்த 6ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த சுற்றுநிரூபத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment