முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியாசாலையில் காணப்படும் வளப் பற்றாக்குறைகள் தொடர்பில் தாம் சுகாதார அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் பிரதமருடைய கவனத்திற்கும் தாம் கொண்டுவந்து முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் நிலவும் சிக்கல் நிலமைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 17.0.2025 (இன்று) இடம்பெற்றது. இக்கூட்டத்தில் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் நிலவும் வளப் பற்றாக்குறைகள் தொடர்பில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியசாலை நிர்வாகத்தினர் அண்மையில் என்னைச் சந்தித்து, வைத்தியசாலையிலுள்ள வளப் பற்றாக்குறை தொடர்பில் கலந்துரையாடினர்.
அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் வைத்தியர் இல்லாத நிலமை, ஆண் நோயாளர்களுக்கானதும், பெண் நோயாளர்களுக்குமான விடுதிப் பற்றாக்குறையால் நோயாளர்களைப் பராமரிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் உள்ளிட்ட வைத்தியசாலையின் பல்வேறு வளப் பற்றாக்குறை தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தினர் என்னிடம் சுட்டிக்காட்டியிருந்தனர்.
அத்தோடு வைத்தியசாலையில் நிலவும் இந்த வளப் பற்றாக்குறைகள் தொடர்பிலான மகஜர் ஒன்றினையும் வைத்தியசாலை நிர்வாகத்தினர் என்னிடம் கையளித்திருந்தனர்.
இந்நிலையில் இது தொடர்பில் நானும் சக பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கமும் சேர்ந்து குறித்த வைத்தியசாலை பிரச்சினை தொடர்பில் சுகதாரா அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவந்தோம்.
இது தொடர்பில் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளின்போது பிரதமருடைய கவனத்திற்கும் கொண்டுவரவுள்ளேன்.
அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தொடர்ந்தும் கவனம் செலுத்தப்படுமெனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment