(நா.தனுஜா)
ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார கொள்கைத்திட்டம் நாட்டுக்கு பொருத்தமற்றது எனவும், ஆகவே புதிய கொள்கைத் திட்டத்தை அறிமுகப்படுத்துவோம் எனவும் கூறி ஆட்சிபீடமேறிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தற்போது ரணிலின் பொருளாதாரக் கொள்கைத் திட்டத்தையே எவ்வித மாற்றமுமின்றி நடைமுறைப்படுத்தி வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித்த ஹேரத் விசனம் வெளியிட்டுள்ளார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (10) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு விசனம் வெளியிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது, அண்மைக் காலங்களில் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் சிலர் ஊடகங்களுடன் முரண்பட்டு வருகின்றனர். குறிப்பாக ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்கள் தொடர்பில் பொருத்தமற்ற கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். சில சந்தர்ப்பங்களில் கருத்து வெளியிடுகையில், பத்திரிகைகளின் பெயர்களைக் குறிப்பிடுகின்றார்.
பாராளுமன்றத்தில் தொலைக்காட்சி அலைவரிசைகளின் பெயர்களைக் கூறி உரையாற்றுகின்றார். நான் கடந்த காலங்களில் ஊடகத்துறை அமைச்சில் பணியாற்றியவன் என்ற ரீதியில், தற்போதைய அரசாங்கம் ஊடகத்துறையைக் கையாளும் விதம் மிகவும் ஆபத்தானது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
அரசாங்கம் தற்போது பதற்றமடைந்து துலங்கலை வெளிக்காட்டும் நிலையை அடைந்திருக்கின்றது. வெவ்வேறு சம்பவங்கள் தொடர்பில் ஊடகங்கள் மாறுபட்ட கருத்துக்களை வெளியிடக்கூடும். இருப்பினும் நாம் அதனைப் பொறுமையுடன் கையாண்டு, அதற்கு அறிவார்ந்த ரீதியில் பதிலளிக்க வேண்டும்.
மாறாக ஊடகங்கள் தமக்கு ஏற்றவாறு அல்லது தமக்குச் சார்பாக செயற்படவில்லை என அரசாங்கம் பதற்றம் அடையக்கூடாது. எனவே பிரதமர், ஊடகத்துறை அமைச்சர் உள்ளிட்ட அரசாங்கத்தின் பிரதிநிதிகள் ஊடகங்களைப் பெயர் குறிப்பிட்டுத் தாக்குவதை உடனடியாக முடிவுக்குக்கொண்டுவர வேண்டும்.
அடுத்ததாக நாட்டின் பொருளாதார நிலைவரம் தொடர்பில் கடந்த புதன்கிழமை (8) பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது, அரசாங்கத்தின் பொருளாதார மேம்பாட்டு செயற்திட்டத்தை சீர்குலைப்பதற்கு எதிர்க்கட்சி முயற்சிப்பதாகவும், ஆனால் எதிரணி என்ன கூறினாலும் தாம் தற்போதைய பாதையிலேயே பயணிப்போம் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த கூறினார்.
அதனை சீராக ஆராய்ந்து பார்த்தால், 'நாம் ரணில் விக்ரமசிங்கவினால் உருவாக்கப்பட்ட பொருளாதாரப் பாதையில் பயணிக்கின்றோம். அதற்கு எதிரான கருத்துக்கள் எதிரணியினரால் வெளியிடப்படுகின்றன. இருப்பினும் நாம் அதே பாதையிலேயே பயணிப்போம். ரணில் விக்ரமசிங்கவின் கொள்கைத் திட்டத்திலிருந்து வெளியேறமாட்டோம்' என்றே அவர் கூறுகின்றார்.
எனவே அரசாங்கத்தின் பொருளாதார நிபுணர் குழு ஜனாதிபதியை நெருக்கடிக்குள் தள்ளுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு என்றே நான் கருதுகின்றேன். நாம் ஆட்சியிலிருந்த காலத்திலும் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெற்றன.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பொருளாதார நிபுணர் குழுவினர் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு முரணான விதத்தில் செயற்படுவார்கள். அதன் விளைவாக ஆட்சியாளர் நெருக்கடிக்குள் தள்ளப்படுவார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார வேலைத்திட்டம் பொருத்தமற்றது என்றும், ஆகவே புதிய பொருளாதார வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் மக்கள் கருதியமையினாலேயே புதிய தரப்பொன்று தெரிவு செய்யப்பட்டது.
அதுமாத்திரமன்றி தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய கொள்கைத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாகக் கூறித்தான் ஆட்சிபீடமேறியது. இவ்வாறானதொரு பின்னணியில் தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார நிபுணர்களால் கூறப்படும் கருத்துக்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விசேட கவனம் செலுத்த வேண்டும்.
அதேவேளை தற்போது 'க்ளீன் ஸ்ரீலங்கா' செயற்திட்டமே அரசாங்கத்தின் பிரதான கொள்கைத் திட்டமாக மாறியிருக்கின்றது. அதனை விட வேறு எந்தவொரு கொள்கையும் அரசாங்கத்துக்கு இல்லையா? அதேபோன்று இந்த 'க்ளீன் ஸ்ரீலங்கா' செயற்திட்டத்தின் நோக்கம் மற்றும் அதனூடாக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உரியவாறு விளக்கமளிக்கப்படவில்லைபோல் தெரிகிறது.
அதுமாத்திரமன்றி நாட்டின் பொருளாதாரம் இன்னமும் முழுமையாக மீட்சியடையவில்லை. வெளிநாட்டுக் கையிருப்பின் அளவை உயர்த்துவதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வரவு, செலவுத் திட்டப் பற்றாக்குறையை ஈடுசெய்வதற்கான திட்டங்கள் வகுக்கப்படவில்லை. தேர்தலின்போது வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.
அவ்வாறிருக்கையில் எதற்காக 'க்ளீன் ஸ்ரீலங்கா' செயற்திட்டத்துக்கு இந்தளவு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது? இச்செயற்திட்டத்தை உரியவாறு நடைமுறைப்படுத்துவதிலும் முறையான திட்டமிடல் இல்லை எனச் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment