மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக அரச வைத்தியசாலையில் கட்டப்பட்ட முதலாவது மற்றும் ஒரேயொரு என்புமச்சை மற்றும் இரத்த அணு மாற்று சிகிச்சை பிரிவு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இன்று (02) இடம்பெற்ற இவ்வைபவத்தில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ, சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க, விமானப்படைத் தலைவர் எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ மற்றும் கதிர்காமம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
இப்பிரிவானது, ருஹுணு மகா கதிர்காம விகாரையின் நிதியுதவி மற்றும் இலங்கை விமானப் படையின் முழு உழைப்பு மற்றும் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது
கடந்த 2023 இல் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையின் சிறுவர் வார்டுகளில் சிறுவர்களுக்கான இடப்பற்றாக்குறை காரணமாக ருஹுணு மஹா கதிர்காம விகாரையின் பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் மூன்று மாடிகளைக் கொண்ட வார்டு வளாகத்தை நிர்மாணிக்க முன்வந்தது.
ஆலய நிதியத்தின் நிதி அனுசரணையுடன் இடம்பெற்ற அந்த திட்டத்திற்கு விமானப் படையின் உழைப்பு பங்களிப்பு காரணமாக, மூன்று அடுக்கு வார்டு வளாகம் நான்கு அடுக்கு வார்டு வளாகமாக நிர்மாணிக்கப்பட்டு 2024 இல் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இவ்வாறு கட்டப்பட்ட நான்கு மாடி கட்டடத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது தளங்களை பயன்படுத்துவதன் மூலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்வின் நம்பிக்கை வழங்கும் வகையில் ஒரு புதிய என்புமச்சை மற்றும் இரத்த அணுக்கள் மாற்று சிகிச்சை பிரிவு நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், எதிர்கால பராமரிப்பு நடவடிக்கைகளில் இலங்கை விமானப்படையின் பங்களிப்பை வழங்குவதற்கு விமானப்படைத் தளபதி உறுதியளித்தார்.
No comments:
Post a Comment