பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஶ்ரீதரனுக்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட விமான நிலைய அதிகாரிகள் அதற்கான நீதிமன்ற வழக்கினை குறிப்பிடவில்லை. ஶ்ரீதரனின் சிறப்புரிமை மீறப்பட்டு, அவருக்கு பாரியதொரு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் சபையில் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற அமர்வின்போது விமான நிலையத்தில் தான் தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பில் சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஶ்ரீதரன், அச்சந்தர்ப்பத்தில் விமான நிலையத்தில் தன்னுடன் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் இருந்ததாகவும், அவர் விமான நிலைய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து உரையாற்றிய ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, தமிழக முதலமைச்சரின் அழைப்புக்கமைய அயலகத் தமிழர் நிகழ்வில் நானும் கலந்து கொண்டேன். விமான நிலையத்தில் பிரபுக்கள் முனையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஶ்ரீதரன் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது நானும் அவ்விடத்தில் இருந்தேன்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஶ்ரீதரனை தடுத்து வைத்து அவருக்கு எதிராக பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர்.
பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தால் அதற்கான வழக்கினை குறிப்பிட வேண்டும். ஆனால் அதிகாரிகள் அவ்வாறு எதனையும் குறிப்பிடவில்லை.
பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதாக அரசாங்கம் குறிப்பிட்டது. ஆனால் இதுவரை அச்சட்டம் நீக்கப்படவில்லை. இந்தச் சட்டத்தின் பிரகாரம் செயற்படுவது தவறானது.
விமான நிலையத்தில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் பின்னர் சமரசத்துக்கு வந்தோம்.
பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஶ்ரீதரனின் உரிமை மற்றும் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. அவருக்கு பாரியதொரு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. ஆகவே முறையான விசாரணைகளை மேற்கொண்டு நியாயத்தை வழங்குங்கள் என்றார்.
No comments:
Post a Comment