இம்முறை பெய்த கனமழையால் பெரும்போக நெற் செய்கைகள் பாரிய அளவில் அழிவடைந்துள்ள நிலையில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பல இடங்களில் இவ்வாறு அழிவடைந்துள்ள நெற் செய்கைகளைப் பார்வையிட்டு, அந்த நெற் செய்கை அழிவுகளுக்கான இழப்பீடுகள் வழங்க இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளாமைக்கு கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை உத்தியோகத்தரை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மிகக் கடுமையாக கடிந்து கொண்டார்.
அதேவளை இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்குரிய இழப்பீடுகள் உடனடியாக வழங்கப்பட வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 30.01.2025 நேற்று இடம்பெற்ற நிலையில் குறித்த கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அண்மையில் விவசாயிகளின் அழைப்பிற்கு அமைவாக வெள்ள அனர்த்தத்தினால் அழிவடைந்த பல வயல்நிலங்களை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நேரடியாகச் சென்று பார்வையிட்டிருந்தார்.
இதன்போது வெள்ள அனர்த்தம் காரணமாக ஏற்பட்டுள்ள பாரிய நெல் அழிவுகளால், தாம் எதிர்நோக்கியுள்ள மிகக் கடுமையான பாதிப்புக்கள் தொடர்பிலும், கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச் சபையின் செயற்பாடுகள் தொடர்பில் விவசாயிகளால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் அதிருப்தியும் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச் சபையிடம் வெள்ள அழிவுகள் குறித்து தாம் முறையிட்டபோதும் அழிவுகள் குறித்து பார்வையிடுவதற்கு அவர்கள் வருவதில்லை எனவும், பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமது பாதிப்பு நிலைமைகளை கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபை உத்தியோகத்தர்களிடம் முறையிடும்போது அவர்கள் விவசாயிகளிடம் நடந்து கொள்கின்ற முறை தொடர்பிலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இந்நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் புதுக்குடியிருப்பு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபை உத்தியோகத்தரை மிகக் கடுமையாகக் கடிந்ததுடன், மிக விரைவாக நெல் அழிவுகளுக்குரிய இழப்பீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment