தேசிய மக்கள் சக்தியே இன்று மக்களுக்கு பெரும் சாபமாகியிருக்கிறது - ஜே.சி.அலவத்துவல - News View

About Us

Add+Banner

Friday, January 3, 2025

demo-image

தேசிய மக்கள் சக்தியே இன்று மக்களுக்கு பெரும் சாபமாகியிருக்கிறது - ஜே.சி.அலவத்துவல

25-6777ce810d56d
(எம்.மனோசித்ரா)

நாட்டு மக்களின் 76 ஆண்டு கால சாபம் குறித்து பேசிய தேசிய மக்கள் சக்தியே இன்று மக்களுக்கு பெரும் சாபமாகியிருக்கிறது. 100 நாட்களில் அரிசியின் விலையை நூறு ரூபாவால் அதிகரிக்கச் செய்திருக்கிறது. 24 மணித்தியாலங்களில் செய்து காட்டுவதாகக் கூறிய விடயங்களில் ஒன்றையேனும் 100 நாட்கள் கடந்தும் இந்த அரசாங்கம் நிறைவேற்றவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (3) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், 76 ஆண்டுகளின் பின்னர் இம்முறை அதிக விலையில் பாற்சோற்றை உண்ண வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். இந்த அரசாங்கம் பதவியேற்கும்போது 170 ரூபாவாக காணப்பட்ட சிவப்பரிசியின் விலை தற்போது 280 ரூபா வரை உயர்வடைந்துள்ளது.

100 நாட்களில் அரிசியின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்த அரசாங்கம் வெட்கப்பட வேண்டும்.

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு அறவிடப்படும் 65 ரூபா வரியைக் குறைத்து, உள்நாட்டு சந்தையில் போட்டித்தன்மையை ஏற்படுத்தி குறைந்த விலையில் மக்களுக்கு அரிசியை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசாங்கம் மக்களை பாதுகாப்பதற்கு பதிலாக அரிசி ஆலை உரிமையாளர்களை பாதுகாத்துக் கொண்டிருக்கிறது.

விலை சூத்திரம் இருந்தால் அரசாங்கம் என்ற ஒன்று எதற்கு என கேள்வியெழுப்பிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இவ்வாண்டிலிருந்து எரிபொருளுக்கான வரியைக் குறைத்து மக்களுக்கு நிவாரண விலையில் அதனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும் என்று எதிர்பார்த்த மக்கள் இன்று அமைச்சர்களின் பிரச்சினைகளை கேட்டுக் கொண்டிருக்கின்றனர். மக்கள் இதற்காக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கவில்லை.

விரைவில் ஐக்கிய மக்கள் சக்தியை மறுசீரமைத்து பாராளுமன்றத்திலும் பாராளுமன்றத்துக்கு வெளியிலும் மக்களுக்கான சேவையை ஆற்றுவோம் என்றார்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *