அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் நேற்று (06) கூடியது.
நிலையியற் கட்டளைகளுக்கு அமைய எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக, தெரிவுக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.
குழுவின் தலைவர் என்ற ரீதியில் இங்கு கருத்துத் தெரிவித்த அவர், குழுவின் செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்ததுடன், அரசாங்க நிதி பற்றிய குழுவினால் கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் சுட்டிக்காட்டினார்.
இதனைத் தொடர்ந்து குழுவின் உறுப்பினர்கள் மற்றும் வருகை தந்திருந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோர் “மத்திய ஆண்டு நிதி நிலை அறிக்கை 2024” மற்றும் அண்மைய பொருளாதார முன்னேற்றங்கள் பற்றி விளக்கமளித்தனர்.
இதன் பின்னர் மத்திய ஆண்டு நிதி நிலை அறிக்கை 2024 இற்கு குழு அனுமதி வழங்கியது.
எல்.எம்.டி சஞ்சிகையினால் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் “வருடத்தின் சிறந்த இலங்கையர்” எனப் பெயரிடப்பட்டமை குறித்து குழு பாராட்டைத் தெரிவித்ததுடன், பொருளாதார மீட்சிக்கு அதிகாரிகள் எடுத்த முயற்சிகளையும் அங்கீகரித்தது.
தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த பணித்திட்டம் குறித்து கவனம் செலுத்திய அரசாங்க நிதி பற்றிய குழு, தேவை ஏற்படும் பட்சத்தில் குழுவினால் மீண்டும் மதிப்பாய்வு செய்யப்படும் என்பதன் அடிப்படையில் இதற்கு அங்கீகாரம் வழங்கியது.
குழுவின் உறுப்பினர்களான, பிரதி அமைச்சர்களான ஹர்ஷன சூரியப்பெரும, சதுரங்க அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, சாணக்கியன் இராசமாணிக்கம், கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, அக்ரம் இலியாஸ், நிமல் பலிஹேன, விஜேசிறி பஸ்நாயக்க, திலின சமரக்கோன், லக்மாலி ஹேமச்சந்திர மற்றும் பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment