(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
சிறையில் உள்ள தம்பியை விடுவிக்க மறுப்பு தெரிவித்ததால் பிரதான ஊடகம் ஒன்று அரசாங்கத்தின் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறது. தம்பிக்கு பொது மன்னிப்பை ஜனாதிபதி வழங்கமாட்டார். தம்பி சிறையில் இருக்க வேண்டுமா அல்லது வைத்தியசாலையில் இருக்க வேண்டுமா என்பது தொடர்பில் ஆராயப்படுகிறது என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09) நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, கொவிட் காலத்தில் என்டிஜன் தொகுதிகள் ஊடாக மோசடி செய்த நபர் இன்று தமது ஊடகங்களை பயன்படுத்தி அரசாங்கத்துக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுக்களை முன்னெடுக்கிறார். போலியான விமர்சனங்களுக்கு நாங்கள் ஒருபோதும் அடிபணியப் போவதில்லை.
சிறையில் உள்ள சகோதரரை விடுதலை செய்ய இணக்கம் தெரிவிக்காத காரணத்தால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது போலியான குற்றச்சாட்டுக்களை ஒரு ஊடக நிறுவனம் வெளியிடுகிறது. சிறையில் உள்ள தம்பியை முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ விடுதலை செய்தார், பின்னர் தம்பி சிறை சென்றார்.
ஜனாதிபதி தேர்தலின்போது சிறையில் உள்ள தம்பியை விடுதலை செய்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் பிரதான ஊடகத்துக்கு வாக்குறுதி வழங்கினார். அதனால் அந்த ஊடக நிறுவனம் எமக்கு எதிராகவும், எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆதரவாகவும் செயற்பட்டது.
சிறையில் உள்ள தம்பியை விடுதலை செய்ய மறுப்பு தெரிவித்ததன் பின்னர் அந்த ஊடகம் அரசாங்கத்துக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறது. சிறையில் உள்ள தம்பியை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஒருபோதும் விடுவிக்கமாட்டார்.
அத்துடன் போலியான குற்றச்சாட்டுக்களால் எம்மை அடிபணிய வைக்கவும் முடியாது. தம்பி சிறைச்சாலையில் இருக்க வேண்டுமா அல்லது சிறைச்சாலை வைத்தியசாலையில் இருக்க வேண்டுமா என்பது தொடர்பில் ஆராயப்படுகிறது.
அரசாங்கம் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை என்று குறிப்பிடப்படுகிறது. பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலையடைந்த அரசாங்கத்தையே பொறுப்பேற்றோம். 52 நாட்களில் அனைத்தையும் சரி செய்ய முடியாது. 2023 ஆம் ஆண்டை காட்டிலும் தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளன.
ஊழலுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குறிப்பிடப்படுகிறது. மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் காட்டு சட்டத்தை செயற்படுத்தியதை போன்று நாங்கள் செயற்பட போவதில்லை. நீதிமன்றம் சுயாதீனமாகவே செயற்படுகிறது. ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை சட்டத்துக்குட்பட்டு முன்னெடுப்போம்.
வழக்குக்கு பயந்து நாட்டை விட்டு தப்பியோடியுள்ள பசில் ராஜபக்ஷவை நாட்டுக்கு வரச் சொல்லுங்கள் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை நோக்கி குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment