(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை இல்லாமலாக்கினால் அவரின் பாதுகாப்புக்காக தெற்கில் இருந்து மக்கள் வருவார்கள். அதேபோன்று அவரின் வீட்டை அரசாங்கம் பெற்றுக் கொண்டால் அவருக்கு 10 வீடுகளை வழங்க இந்த நாட்டு மக்கள் தயாராக இருக்கிறார்கள். அதனால் ஜனாதிபதி துன்முல்லே விமலே போன்று செயற்படக்கூடாது என ஷாமர சம்பத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், ஜனாதிபதி களுத்தறையில் பேசிய விடயம் தொடர்பில் சமூக வலைத்தலங்களில் தெரிவிக்கப்படும் விடயங்களை பாருங்கள். மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு வழங்கப்பட்டிருக்கும் வீட்டை முடியுமானால் 44 இலட்சம் ரூபாவுக்கு குத்தகைக்கு வழங்கிக் காட்டுங்கள்.
காெண்டை கட்டிய சீனர்களுக்குத்தான் 44 இலட்சத்துக்கு அந்த வீட்டை வழங்க முடியும். மஹிந்த ராஜபக்ஷ்வின் வீட்டை முடியுமானால் மீள பெற்றுக் காெள்ளுங்கள்.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஒன்றுக்கு 10 வீடு வழங்குவதற்கு இந்த நாட்டில் மக்கள் இருக்கிறார்கள். அவரின் பாதுகாப்பு தரப்பினரை அகற்றினால் அவருக்கு பாதுகாக்கு வழங்க தெற்கில் இருந்து மக்கள் வருவார்கள்.
சந்திரிக்கா குமாரதுங்க குடும்பம்தான் இந்த நாட்டுக்கு அவர்களின் குடும்ப காணிகளை பகிர்ந்து வழங்கியவர்கள். அதனால் சந்திரிக்கா குமாரதுங்க தனது உத்தியோகபூர்வ வீட்டில் இருந்து வெளியேறினால் அவர்களின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படப்போவதில்லை.
மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் அனைவரும் இந்த நாட்டுக்கு சேவை செய்தவர்கள். அதனால் ஜனாதிபதி தும்முல்லை விமலே போன்று கதைக்கக் கூடாது.
எங்களுக்கு பாதுகாப்பு தரப்பினர் தேவையில்லை. ஆனால் இன்னும் 6 மாதங்களில் அரசாங்கத்தில் இருப்பவர்களுக்கு பாதுகாப்பு தேவைப்படும். அதனால் ஒழுக்கம் தொடர்பில் கதைப்பவர்கள். பாராளுமன்றத்தில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை கற்றுக் கொள்ளுங்கள்.
கிளீன் ஸ்ரீலங்கா ஆரம்ப நிகழ்வுக்கு 70 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக நான் ஆரம்பத்திலே தெரிவித்திருந்தேன். அதனை தற்போது தெரிவிக்கிறேன்.
ஆனால் இந்த விடயத்தை நான் தெரிவித்த மறுநாளே ஜனாதிபதி செயலாளர், பிரதம கணக்காளர் குமாரசிங்க மற்றும் கணக்காய்வாளரை அழைத்து கலந்துரையாடி, இந்த செலவை 9 இலட்சமாக அமைத்தார்கள். நான் இந்த விடயத்தை கதைத்ததால் அரசாங்கத்துக்கு 61 இலட்சம் ரூபா மீதமாகியது.
அத்துடன் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் ஜனவரி மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இந்தக் காலப்பகுதியில் நாட்டில் 10 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும், 7 மரணங்களும் இடம்பெற்றுள்ளன. வரலாற்றில் அதிக துப்பக்கிச் சூடு இடம்பெற்றிருப்பது இந்த காலப்பகுதியிலாகும்.
இவையும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் மூலம் மாற்றம் ஏற்பட வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு சுதந்திரமாக நடமாட முடியுமான சூழல் ஏற்படுகிறது.
அதனால் கிளீன் ஸ்ரீலங்கா மூலம் முதலாவது பாதாள கோஷ்டி, போதைப் பாெருள் வியாபாரங்களை தூய்மைப்படுத்த வேண்டும். அதன் பின்னர் குப்பைகளை அகற்றும் நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என்றார்.
No comments:
Post a Comment