சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவின் கலாநிதி பட்டம் தொடர்பான தகவல் நாடாளுமன்ற இணையத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தின் இணையத்தளத்தில் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல கலாநிதி பட்டம் பெற்றவர் என்ற குறிப்பு அகற்றப்பட்டுள்ளதை தொடர்ந்து சபாநாயகரின் கல்வித்தகமை குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன.
முன்னர் கலாநிதி அசோக சப்புமல் ரன்வல என குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் தற்போது கலாநிதி என்பது அகற்றப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அவர் தான் கலாநிதி பட்டம் பெற்றவர் என குறிப்பிட்டது எவ்வளவு தூரம் உண்மையானது என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட அசோக சபுமல் ரன்வல வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகி இருந்தார்.
அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்த வேட்புமனுவில் தன்னை ஒரு கலாநிதியாக குறிப்பிட்டிருந்தார்.
எனினும் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல குறிப்பிடுவது போன்று அவர் மொரட்டுவை பல்கலைக்கழக பட்டதாரியோ, ஜப்பானிய பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெறவோ இல்லை என்று அண்மைக்காலமாக பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகி இருந்தன.
குறித்த தகவல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் சபாநாயகர் பதவி விலக வேண்டுமென்று பல்வேறு தரப்புகளும் வலியுறுத்தி இருந்தனர்.
இந்நிலையில் நேற்றையதினம் (09.12.2024) தொடக்கம் நாடாளுமன்ற இணையத்தளத்தில் சபாநாயகரின் விபரங்கள் தொடர்பான பக்கத்தில் அவரது கலாநிதி பட்டம் தொடர்பான விபரங்கள் நீக்கப்பட்டுள்ளது.
இதுகாலவரையும் கலாநிதி கௌரவ அசோக சபுமல் ரன்வல என்று குறிப்பிடப்பட்டிருந்த அவர், கலாநிதி பட்டம் இன்றி கௌரவ அசோக சபுமல் ரன்வல என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.
கடந்த 24 மணி நேரத்திலேயே இணையத்தளத்தில் இந்த மாற்றங்களை செய்துள்ளனர். கூகுள் தேடு பொறி கலாநிதி என்ற காண்பிக்கின்றது என தவறான தகவல்கள் குறித்த ஆய்வாளர் சஞ்சனா ஹட்டொட்டுவ தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment