(எம்.வை.எம்.சியாம்)
பெலரூஸ் நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான லொக்கு பெட்டி விடுதலை செய்யப்படவில்லை என்றும் அந்த நாட்டு பொலிஸாரினால் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி பெலரூஸ் அதிகாரிகளால் அண்மையில் விடுவிக்கப்பட்டதாகவும் அதனை முன்னிட்டு பல்வேறு விருந்து உபசாரம் இடம்பெற்றதாகவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகிய தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை எனவும் குற்றவாளியை மீள இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளாரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்தார்.
கந்தளாயில் வெள்ளிக்கிழமை (6) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
'லொக்கு பெட்டி' என அழைக்கப்படும் சுஜீவ ருவன் குமார என்பவர் பெலரூஸ் அதிகாரிகளால் அண்மையில் விடுவிக்கப்பட்டதாகவும் அதனை முன்னிட்டு பல்வேறு விருந்து உபசாரம் இடம்பெற்றதாகவும் சமூக வலைதளங்களில் பல தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன.அவை உண்மைக்கு புறம்பானவையாகும்.
இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் பெலரூஸ் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு வினவியது. கைது செய்யப்பட்ட குறித்த குற்றவாளி இன்னும் பொலிஸ் தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விடுதலை செய்யப்படவில்லை என்றும் உறுதிப்படுத்தி இருந்தனர்.
அத்துடன் குற்றவாளியை நாடு கடத்தல் சட்டத்தை பயன்படுத்தி இலங்கைக்கு அழைத்து வர குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய இந்த நடவடிக்கையை எதிர்காலத்தில் முன்னெடுத்து இலங்கைக்கு கொண்டு வந்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க தயாராக இருக்கிறோம் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment