அவசியமா, அவசியமற்றதா? என்பதை இலங்கையர்களே தீர்மானிக்க வேண்டும், இந்தியாவின் விருப்பத்துக்கமைய நடத்துவது முறையற்றது - சரத் வீரசேகர - News View

About Us

About Us

Breaking

Monday, December 16, 2024

அவசியமா, அவசியமற்றதா? என்பதை இலங்கையர்களே தீர்மானிக்க வேண்டும், இந்தியாவின் விருப்பத்துக்கமைய நடத்துவது முறையற்றது - சரத் வீரசேகர

(இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம், மாகாண சபை முறைமை இந்த நாட்டுக்கு அவசியமா, அவசியமற்றதா? என்பதை இலங்கையர்களே தீர்மானிக்க வேண்டும். இந்தியாவின் விருப்பத்துக்கு அமைய மாகாண சபைத் தேர்தலை நடத்துவது முறையற்றது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

சமஷ்டி ஆட்சி முறைமையை வலியுறுத்தி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய அரசமுறை விஜயத்தின்போது கைச்சாத்திடப்படும் ஒப்பந்தங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம்.

இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தால் இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் வகையிலான செயற்திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் மற்றும் மாகாண சபை முறைமை நாட்டுக்க அவசியமா, அவசியமற்றதா என்பதை இலங்கையர்களே தீர்மானிக்க வேண்டும்.

எதிர்வரும் ஆண்டு இரண்டாம் காலாண்டளவில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் குறிப்பிட்டுள்ளதாக அறிய முடிகிறது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் இந்தியாவினால் பலவந்தமான முறையில் அமுல்படுத்தப்பட்டது. ஆகவே இந்தியாவின் விருப்பத்துக்கமைய மாகாண சபைத் தேர்தலை நடத்துவது முறையற்றது.

மாகாண சபைத் தேர்தல் குறித்து மக்கள் எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார்கள் என்பதை அரசாங்கமும், இந்தியாவும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாட்டுக்கும், தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டுக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன.

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்த பணிகளை நிறைவு செய்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சமஷ்டி முறைமையிலான அரசியலமைப்பு உருவாக்கத்துக்கே நல்லாட்சி அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது. சமஷ்டியாட்சி முறைமை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் அம்சங்களை இல்லாதொழிக்கும்.

ஆகவே எக்காரணிகளுக்காகவும் சமஷ்டியாட்சி அரசியலமைப்பை உருவாக்குவதற்கு இடமளிக்க மாட்டோம் என்றார்.

No comments:

Post a Comment