ஆவணங்களை சமர்ப்பிக்க தவறினால் அசோக சப்புமல் ரன்வல பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் : ஆஷு மாரசிங்க - News View

About Us

About Us

Breaking

Monday, December 16, 2024

ஆவணங்களை சமர்ப்பிக்க தவறினால் அசோக சப்புமல் ரன்வல பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் : ஆஷு மாரசிங்க

(எம்.ஆர்.எம்.வசீம்)

பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல தனது கலாநிதி பட்டம் தொடர்பான ஆவணங்களை உடனடியாக சமர்ப்பிக்க முடியாது என்ற காரணத்தினாலே சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதனால் அவர் குறிப்பிட்ட காலத்தில் அந்த ஆவணங்களை சமர்ப்பித்தால் மீண்டும் அவருக்கு சபாநாயகர் பதவியை வழங்க வேண்டும். அவரால் அதனை சமர்ப்பிக்க முடியாமல் போனால் அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜினாமா செய்ய வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்துள்ளமை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவுக்கு தனது கலாநிதி பட்டத்துக்காக ஜப்பான் வசேதா பல்கலைக்கழகத்துக்கு நுழைவதற்கான அனுமது கடிதத்தையேனும் காட்டுவதற்கு முடியாமல் போயிருக்கிறது. இதன் பின்னணியிலேயே ஜனாதிபதியின் ஆலாேசனையில் அல்லது அவரது சுய விருப்பத்தின் பெயரில் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அதேநேரம் தனது கலாநிதி பட்டத்துக்கான சான்றிதழ்களை குறித்த பல்கலைக்கழகத்தில் இருந்து விரைவாக பெற்றுக்கொள்ள முடியாத காரணத்தில் பதவியை இராஜினாமா செய்வதாகவும் மிக விரைவாக அது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிப்பதாகவும் அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.

அசோக ரன்வல தெரிவித்துள்ளதன் பிரகாரம், அவரது கலாநிதி பட்டத்துக்கான ஆவணங்களை குறித்த பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றுக்கொண்டு, சமர்ப்பிக்க அவருக்கு குறைந்தது 3 மாத காலம் வழங்கி, அந்த ஆவணங்களை சமர்ப்பிக்க சந்தர்ப்பம் வழங்க வேண்டும். அவர் அந்த ஆவணங்களை சமர்ப்பித்தால், மீண்டும் அவருக்கு சபாநாயகர் பதவியை வழங்க வேண்டும்.

அதேநேரம் அவர் தெரிவித்துள்ளதன் பிரகாரம் குறிப்பிட்ட காலத்துக்குள் அவர் தனது கலாநிதி பட்டத்துடன் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க தவறினால், அவர் நிச்சயமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment