(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டியதொரு சட்டமாகும். என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். சர்வதேச சட்ட திட்டங்களுக்கு அமைவாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஒன்றை அமைத்துக் கொள்வதே எமது திட்டம். அதனால் இந்த சட்டத்தை ஏற்படுத்தி அனுமதித்துக் கொள்ளும்வரை நாட்டில் இனவாதம், மதவாதம் தலைதூக்கும்போது அதனை அடக்குவதற்கு தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரமே நடவடிக்கை எடுக்க வேண்டி ஏற்படுகிறது. அத்துடன் அடுத்த வருடம் முதல் காலாண்டில் திருடப்பட்ட சொத்துக்களை மீட்பது தொடர்பான 3 புதிய சட்டமூலங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பேன் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (03) இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான இரண்டாம் நாள் விவாத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், மக்கள் எமக்கு வழங்கிய ஆணையின் பிரகாரம் நாங்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளையும் ஜனாதிபதி சபைக்கு சமர்ப்பித்த கொள்கை பிரகடன உரையில் தெரிவித்த விடயங்களையும் அவ்வாறே பாதுகாத்து நிறைவேற்றுவோம்.
மக்களின் பிரதான எதிர்பார்ப்பாக இருப்பது சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த வேண்டும் என்பதுடன் நாட்டின் வளங்களை அழித்த மோசடிகாரர்களுக்கு எதிராக சட்டத்தை நிலைநாட்டுவதாகும். இந்த பிரதான இரண்டு விடயங்களை நாங்கள் செய்வோம் என்ற வாக்குறுதியை மக்களுக்கு வழங்குகிறோம்.
தேர்தல் பிரசாரங்களின்போது எதிர்க்கட்சியினர் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக பல்வேறு பொய் பிரசாரங்களை பரப்பி வந்னர். அந்த அனைத்து பிரசாரங்களையும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதியும் நவம்பர் மாதம் 14ஆம் திகதியும் மக்கள் நிராகரித்துள்ளனர்.
நாட்டில் இனவாதம், மதவாதத்துக்கு எதிராக செயற்பட மக்கள் ஒன்றுபட்டுள்ளனர் என்பதை மக்களின் தீர்ப்பின் மூலம் அறிந்துகொளள முடியும்.
நாங்கள் புதிய அரசியல் கலாசாரத்தை ஆரம்பிக்க வேண்டும். கடந்த கால ஆட்சியாளர்கள் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க நடவடிக்கைகளை சர்வதேசத்தின் உதவிகளை பெற்றுக்கொள்ள மாத்திரமே பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் எமது அரசாங்கம் அவ்வாறு செயற்படாது.
தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவது எமது அரசாங்கத்தின் பிரதான கொள்கையாகும். நாங்கள் பல்வேறு மத கலாசாரத்தை பின்பற்றுபவர்கள். அதனால் அனைவரதும் மத கலாசாரத்தை பாதுகாக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அதுவே எமது கொள்கை.
வடக்கு கிழக்கு தொடர்பில் கதைக்கும்போது அவர்கள் நாங்கள் என பிரித்தே பார்க்கிறோம். அந்த மனநிலையை மாற்றி, அவர்கள்தான் நாங்கள் நாங்கள்தான் அவர்கள் என்ற மனநிலையை ஏற்படுத்த வேண்டும். அனைத்து இனத்தவர்களும் இலங்கையர்கள் என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால்தான் நாட்டை முன்னெடுத்து செல்ல முடியும்.
மேலும் நாங்கள் எதிர்க்கட்சியில் இருக்கும்போது பல்வேறு மனித உரிமை மீறல்களுக்கு ஆளாக்கப்பட்டோம். ஆனால் அந்த நிலை யாருக்கும் ஏற்படும் வகையில் எமது அரசாங்கம் செயற்படாது என்பதை உறுதியாக தெரிவிக்கிறோம்.
பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டிதொரு சட்டமாகும் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அந்த கொள்கையில் மாற்றம் இல்லை. ஆனால் சர்வதேச சட்ட திட்டங்களுக்கு அமைவாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஒன்றை அமைத்துக் கொள்வதே எமது திட்டம்.
அதனால் இந்த சட்டத்தை ஏற்படுத்தி அனுமதித்துக் கொள்ளும்வரை நாட்டில் இனவாதம், மதவாதம் தலைதூக்கும்போது அதனை அடக்குவதற்கு தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரமே நடவடிக்கை எடுக்க வேண்டி ஏற்படுகிறது.
பேச்சு சுதந்திரம் ஒரு மனிதனின் அடிப்படை உரிமையாகும். அதனை நாங்கள் இல்லாமல் செய்ய மாட்டோம். சமூக வலைத்தலங்களில் எதனை வேண்டுமானாலும் பிரசுரிக்க உரிமை இருக்கிறது.
ஆனால் கடந்த சில தினங்களில் மாவீரர் தினத்தை அனுஷ்டித்ததாக பொய் பிரசாரங்களையும் போலி தகவல்களையும் சமூக வலைத்தலங்களில் பிரசுரிப்பது எவருடைய உரிமையும் அல்ல.
வடக்கையும் தெற்கையும் குழப்பி இனவாத யுத்தத்தை மீண்டும் ஏற்படுத்தவா இவ்வாறு செய்கிறார்கள். அதனால் பேச்சு சுதந்திரம் என்றால் என்ன என்பது தொடர்பில் தெரிந்துகொண்டு செயற்பட வேண்டும்.
எனவே அரசியல் ரீதியில் நாங்கள் வேறுபட்டு ஒருவருக்கொருவர் வித்தியாசமான கொள்கையை பின்பற்றி வந்தாலும் ஜனநாயக முறையில் செயற்பட தயார். ஆனால் யாரேனும் அரசியல் நோக்கில் நாட்டில் இனவாதத்தை தூண்ட நடவடிக்கை எடுத்தால் இந்த அரசாங்கம் ஒருபோதும் இனவாத, அடிப்படைவாத நடவடிக்கைகளுக்கு இடமளிக்கப் போவதில்லை. அதனை தோற்கடிப்போம் என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன்.
நாங்கள் அரசியல் ரீதியில் பிளவுபட்டிருந்தாலும் நாட்டில் இனவாதம் மதவாதத்துக்கு எதிராக ஒன்றிணைந்து செயற்பட முடியும். அதனால் அனைவரும் ஒன்றுபட்டாலே இதனை மேற்கொள்ள முடியும். அதனை இந்த பாராளுமன்றத்தில் இருந்து ஆரம்பிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இந்த செய்தியை எமக்கு கீழ் மட்டத்தில் இருப்பவர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்காக பாராளுமன்றத்தில் இருக்கும் அனைவரதும் ஒத்துழைப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
சட்டத்தின் ஆட்சி தொடர்பில் நாங்கள் தொடர்ந்து கதைக்கிறோம். ஆனால் கடந்த அரசாங்கங்கள் சட்டத்தின் ஆட்சியை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவில்லை. ஆட்சியாளர்கள் தங்களின் தேவைக்கே சட்டத்தின் ஆட்சியை பயன்படுத்தி வந்தார்கள்.
அதனால் தொடர்ந்தும் செல்வந்தர்களும் அதிகாரம் உடையவர்களும் ஒரு சட்டத்தையும் சாதாரண மக்களுக்கு வேறு சட்டத்தையும் நிலைநாட்ட தொடர்ந்தும் இடமளிக்க முடியாது. நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் சட்டத்தின் ஆட்சி முக்கியமகும்.
சட்டத்தின் ஆட்சி இல்லை என்றாலும் முதலீட்டாளர்கள் நாட்டுக்குள் வரமாட்டார்கள். அதனால் மோசடிகாரர்களை சட்டத்துக்கு முன் நிறுத்தி அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு எமது நாடு தொடர்பில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
எனவே அடுத்த வருடம் முதல் காலாண்டில் திருடப்பட்ட சொத்துக்களை மீட்பது தொடர்பான 3 புதிய சட்டமூலங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பேன்.
குற்றவியல் சட்டமூலம், மீட்பு, புனர்வாழ்வு, வங்குராேத்து தொடர்பான சட்டமூலம் மற்றும் கணக்காய்வு சட்டமூலம் ஆகியவற்றுக்கான திருத்தங்கள் சமர்ப்பிக்கப்படும். அதனால் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட அனைவரதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன் என்றார்.
No comments:
Post a Comment