அரசியல் கைதிகளை விடுவிக்க விரைவில் நடவடிக்கை எடுப்போம் : வழுக்கிச் செல்லும் வகையில் வழக்குகளை தயாரிக்க முடியாது - அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார - News View

About Us

About Us

Breaking

Thursday, December 5, 2024

அரசியல் கைதிகளை விடுவிக்க விரைவில் நடவடிக்கை எடுப்போம் : வழுக்கிச் செல்லும் வகையில் வழக்குகளை தயாரிக்க முடியாது - அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

அரசியல் கைதிகள் மற்றும் சாட்சிகள் இல்லாமல் நீண்ட காலம் சிறையில் இருப்பவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம். அதற்காக ஓரிரு மாதங்கள் எமக்கு சந்தர்ப்பம் தாருங்கள் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவி்ததார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04) இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான இரண்டாம் நாள் விவாத்தில் தமிழ் அரசு கட்சி உறுப்பினர் இராசமானிக்கம் சாணக்கியன் உரையாற்றுகையில் தெரிவித்த கோரிக்கைகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

சாணக்கியன் எம்.பி உரையாற்றுகையில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக தமிழ் அரசியல் கைதிகள் சிறைகளில் இருந்து வருகின்றனர். பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிரான கொள்கையுடைய இந்த அரசாங்கம், இந்த சட்டத்துக்கு கீழ் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதற்கு நீதி அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில், அரசியல் கைதிகளை விடுவிப்பதாக நாங்கள் எமது கொள்கை உரையிலும் வாக்குறுதி அளித்திருக்கிறோம். என்றாலும் அதனை ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்தில் செய்வது கடினம் என்பதை உங்களுக்கு உணர்ந்து கொள்ளலாம்.

அதனால் சம்பந்தப்பட்ட சட்ட பிரிவினருடன் கலந்துரையாடி மிக விரைவில் அரசியல் கைதிகள் அல்லது சாட்சி இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்.

அதேபோன்று நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் தொடர்பிலும் நடவடிக்கை எடுப்போம் அது தொடர்வில் எந்த பிரச்சினையும் இல்லை.

அதேபோன்று ஊழல் மோசடி தொடர்பிலும் விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்.

குறிப்பாக ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலும் நடவடிக்கை எடுப்போம். வழக்கு ஒன்று தாக்கல் செய்தால் அதில் இருந்து வழுக்கிச் செல்லும் வகையில் வழக்குகளை தயாரிக்க முடியாது. உறுதியான சாட்சி இருக்க வேண்டும்.

அதனால் 70 வருட காலம் சென்ற இந்த பாதையை மாற்றியமைக்க வேண்டும். அதற்கு எமக்கு இன்னும் ஓரிரு மாதங்கள் தாருங்கள். அதன்போது நீங்கள் தெரிவித்த விடயங்கள் இடம்பெறும் என்றார்.

No comments:

Post a Comment