அரிசி, தேங்காய் உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களை பதுக்கி வைத்தால் கடும் நடவடிக்கை - அமைச்சர் வசந்த சமரசிங்க - News View

About Us

About Us

Breaking

Sunday, December 8, 2024

அரிசி, தேங்காய் உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களை பதுக்கி வைத்தால் கடும் நடவடிக்கை - அமைச்சர் வசந்த சமரசிங்க

(இராஜதுரை ஹஷான்)

அரிசி மற்றும் தேங்காய் உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களை பதுக்கி வைக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவாது என வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

சந்தையில் நிலவும் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு தொடர்பில் வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, பல்வேறு காரணிகளால் அரிசி மற்றும் தேங்காய் ஆகிய உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளன. அரிசி தட்டுப்பாட்டுக்கான குறுகிய கால தீர்வாக இந்தியாவில் இருந்து 70 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரதான அரிசி உற்பத்தியாளர்கள் சந்தைக்கு அரிசியை விநியோகிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம். அரிசி மற்றும் தேங்காய் உட்பட அத்தியாவசிய உணவு பொருட்களை பதுக்கி வைக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.

பண்டிகை காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவாது. பெரும்போக விவசாயத்துக்கு தேவையான வளங்கள் பெற்றுக் கொடுக்கப்படும். பண்டிகை காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகளை குறைக்க உரிய தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment