நிபந்தனைகளை அவ்வாறே முன்னெடுத்துச் செல்வதாக ஜனாதிபதி தெரிவித்த கருத்தை வரவேற்கிறேன் - ரவி கருணாநாயக்க - News View

About Us

About Us

Breaking

Thursday, December 5, 2024

நிபந்தனைகளை அவ்வாறே முன்னெடுத்துச் செல்வதாக ஜனாதிபதி தெரிவித்த கருத்தை வரவேற்கிறேன் - ரவி கருணாநாயக்க

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

தேர்தல் மேடைகளில் எவ்வாறாக பிரசாரம் செய்தாலும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கொள்கை பிரகடன உரையின்போது, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்டுள்ள இணக்கப்பட்டை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதாக தெரிவித்திருந்ததை வரவேற்கிறேன். நாட்டை கட்டியெழுப்ப அரசாங்கம் தற்போது செல்லும் பயணத்தை அவ்வாறே செல்ல வேண்டும். இதில் குறுக்குவழிகள் இல்லை என புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (5) அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வாக்குப்பதி கணக்கறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகாெண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நாடு வங்குராேத்து அடைந்த நேரத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி எமது கடன் செலுத்துவதை 2028 ஆம் ஆண்டு வரை பிற்போட நடவடிக்கை எடுக்க முடியுமாகியது நாங்கள் பெற்றுக் கொண்ட வெற்றியாகும்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தேர்தல் மேடைகளில் என்ன பேசினாலும், ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துள்ள இணக்கப்பாட்டை அவ்வாறே முன்னெடுத்துச் செல்வதாக இந்த சபையில் தெரிவித்ததை வரவேற்கிறேன்.

இதனைத்தவிர வேறு வழியில்லை. சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை சிறிது காலத்துக்கு நஞ்ஞாக இருந்தாலும் பிற்காலத்தில் அது சுவையாக இருக்கும்.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஐக்கிய தேசிய கட்சி பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருக்கிறது. ஜே.ஆர். ஜயவர்த்தன திறந்த பொருளாதார கொள்கையை அறிமுகப்படுத்தி பாரிய வேலைத்திட்டங்களை செய்துள்ளார்.

மாற்று வழி இலலாமல் இந்த நடவடிக்கைக்கு குறை சொல்லிக்கொண்டு 40 வருடங்களாக இந்த பயணத்தில் வந்திருக்கிறோம்.

அதனால் ஐக்கிய தேசிய கட்சிக்கு குறை கூறிக் கொண்டிருக்காமல் அதில் நல்லவிடயங்களை எடுத்துக் கொண்டு தவறுகள் இருந்தால் அதனை நிவர்த்தி செய்துகொண்டு மாற்று திட்டங்களை முன்வைக்க வேண்டும்.

நாடு வங்குராேத்து அடைந்தபோது நாட்டை முன்னெடுத்துச் செல்ல சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமாகும். அதனால் சர்வதேச நாணய நிதியத்தின் விடயத்தில் நாங்கள் விளையாடக்கூடாது. அது பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

அதனால் அரசாங்கம் தற்போது செல்லும் பாதை சரி. இந்த வழியைத்தவிர வேறு வழியில்லை. இதற்கு குறுக்கு வழியும் இல்லை. மாற்று வழி இல்லாமையாலே சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டை அவ்வாறே முன்னெடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். அதற்காக எமது நாட்டின் பொருளாதாரத்தை அதிகரிப்பதற்கு அவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் கேட்க வேண்டியதில்லை.

எனவே 2028ஆம் ஆண்டில் இருந்து நாங்கள் மீண்டும் எமது கடன்களை செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கிறது. அதற்கு முகம்கொடுக்க முடியுமான வகையில் எமது தேசிய உற்பத்தியை அதிகரித்து, தேசிய வருமானத்தை அதிகரித்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment