அமைச்சரவையின் கூட்டு நம்பிக்கையை மீறிய கெ​ஹெலியவின் செயல் - News View

About Us

About Us

Breaking

Sunday, December 1, 2024

அமைச்சரவையின் கூட்டு நம்பிக்கையை மீறிய கெ​ஹெலியவின் செயல்

தரமற்ற நோய் எதிர்ப்பு மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு போலியான முன்மொழிவுகள் அடங்கிய அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்து, அமைச்சரவையின் கூட்டு நம்பிக்கையை முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீறியுள்ளதாக மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்துடன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அப்போதைய அமைச்சரவையின் அமைச்சர்கள் வழங்கிய வாக்குமூலங்களினூடாக இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் சார்பாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

தரமற்ற தடுப்பூசி மருந்துகளை கொள்வனவு செய்வது தொடர்பான விசாரணைகள் நேற்று (30) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் மீள அழைக்கப்பட்டது.

இதன்போது, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்த வழக்கின் முதலாவது சந்தேகநபர் சுதத் ஜானக பெர்னாண்டோ மற்றும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட ஏனைய 10 சந்தேகநபர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

அமைச்சரவைப் பத்திரத்தில் எந்தெந்த மருந்துகள் தேவை என தெளிவாக குறிப்பிடப்படவில்லை என்றாலும், சுகாதார அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல்லவை நம்பி அமைச்சரவை அனுமதி வழங்கியதாக, முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர். 

மருந்துகளுக்கு தட்டுப்பாடு இருப்பதாகக்கூறி, போலியாக அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளமை தனக்குத் தெரியாதெனவும், தாம் அறிந்திருந்தால் அதற்கான அனுமதியை வழங்கியிருக்க மாட்டேன் எனவும் அமைச்சர் ஒருவர் அங்கு குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment