(இராஜதுரை ஹஷான்)
அரிசி இறக்குமதிக்கான வரையறை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள நிலையில் 2900 மெற்றிக் தொன் அரிசி தனியார் அரிசி இறக்குமதியாளர்கள் ஊடாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக தனியார் இறக்குமதியாளர்கள் அரிசி இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் இம்மாதம் 4ஆம் திகதி தற்காலிகமாக அனுமதி வழங்கியது.
இதற்கமைய இம்மாதம் 10ஆம் திகதி முதல் வியாழக்கிழமை (12) வரையான காலப்பகுதியில் மாத்திரம் தனியார் இறக்குமதியாளர்கள் 2900 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்துள்ள நிலையில், 1900 மெற்றிக் தொன் அரிசி தரையிறக்கப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தொகை விலை தொடர்பில் காணப்படும் சிக்கல்களினால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை சந்தைக்கு விநியோகிக்க முடியாத நிலை காணப்படுவதாக புறக்கோட்டை அரிசி வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்தியாவில் இருந்து 70 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றில் முதல் தொகையாக 5200 மெற்றிக் தொன் அரிசி திங்கட்கிழமை (16) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அரிசியை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளை சுற்றிவளைக்கும் சோதனை நடவடிக்கைகளை நுகர்வோர் அதிகார சபை முன்னெடுத்துள்ளது.
இதற்கமைய கடந்த வாரம் முதல் இன்று வரையான காலப்பகுதியில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் 200 சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், திங்கட்கிழமை முதல் உரிய சட்ட நடவடிக்கைக்கைகளை முன்னெடுப்பதாக நுகர்வோர் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
அரிசி தட்டுப்பாடு விவகாரத்தை அரசியலாக்குவதை எதிர்க்கட்சியினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்களில் நெல்லை உற்பத்தி செய்ய முடியாது. ஆகவே சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு குறுகிய கால அடிப்படையில் தீர்வு காண்போம். நிலையான தீர்வுக்கு சிறந்த திட்டங்களை முன்னெடுப்போம் என வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment