200 வருட கால பிரச்சினைகளுக்கு ஓரிரு இரவில் தீர்வு காண முடியாது : மக்களுக்கு எதிரான தீர்மானங்களுக்கு கடும் எதிர்ப்பை தெரிவிப்போம் - பழனி திகாம்பரம் - News View

About Us

About Us

Breaking

Thursday, December 5, 2024

200 வருட கால பிரச்சினைகளுக்கு ஓரிரு இரவில் தீர்வு காண முடியாது : மக்களுக்கு எதிரான தீர்மானங்களுக்கு கடும் எதிர்ப்பை தெரிவிப்போம் - பழனி திகாம்பரம்

(எம்.ஆர்.எம். வசீம்,  இராஜதுரை ஹஷான்)

மலையகத்தின் 200 வருட கால பிரச்சினைகளுக்கு ஓரிரு இரவில் தீர்வு காண முடியாது. கட்டம் கட்டமாகவே தீர்வு காண முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (4) நடைபெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான  இரண்டாம் நாள்  விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர்  மேலும் தெரிவித்ததாவது, நான்காவது தடவையாகவும் என்னை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்த நுவரெலியா மாவட்ட மக்களுக்கு  நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  பாரிய அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கும், புதிய அரசாங்கத்துக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம்.

நாட்டு மக்களின் நலன் கருதி அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம். அதேபோல் மக்களுக்கு எதிராக எடுக்கும் தீர்மானங்களுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்போம்.  

இனவாதம் மற்றும் மதவாதம் இல்லாத அரச சூழலை உருவாக்குவதாக ஜனாதிபதி குறிப்பிடுவதை வரவேற்கிறேன்.

கடந்த கால ஆட்சியாளர்கள் இனவாதம் மற்றும் மதவாதம்  ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி  செயற்பட்டதால் நாடு பல நெருக்கடிகளை எதிர்கொண்டது. ஆகவே இந்த நிலைமை இனி மாற்றம் பெற வேண்டும். 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு பெருந்தோட்ட மக்கள் ஆதரவளித்துள்ளார்கள்.

பெருந்தோட்டத்தை பின்புலமாக கொண்ட இரண்டு அமைச்சர்கள் அமைச்சரவையில் உள்ளார்கள். கடந்த காலங்களில்  நாங்கள் ஏதும் செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டது. மலையகத்தின் 200 வருட கால பிரச்சினைகளுக்கு ஓரிரு இரவில் தீர்வு காண முடியாது. கட்டம் கட்டமாகவே தீர்வு காண முடியும்.

பெருந்தோட்ட மக்களின் அபிவிருத்திக்காக நல்லாட்சி அரசாங்கத்தில் பல திட்டங்களை முன்னெடுத்திருந்தோம். ஐந்தாண்டு கால திட்டம் மற்றும் மலையக அபிவிருத்தி அதிகார சபையை ஸ்தாபித்தோம். இந்த அபிவிருத்தி சபையின் செயற்திட்டங்களை தற்போதைய அரசாங்கம் தொடர வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment