இலங்கை அரச ஹஜ் குழுவின் செயற்பாடுகளில் அதிகளவான முறைகேடுகள் இடம்பெறுவது தொடர்பாக தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத், அவசரமாக இதில் மாற்றங்களை ஏற்படுத்த முற்பட்டால் ஹஜ் ஏற்பாடுகளில் சிக்கல்கள் ஏற்பட்டு யாத்திரிகர்களுக்கு சிரமம் ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வக்பு சபை குறித்து பல்வேறு முறைப்பாடுகள் பலதரப்பினராலும் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்விடயங்களில் அவசரமாக மாற்றத்தை கொண்டுவர முடியாது எனவும் அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதன்போது எதிர்காலத்தில் ஹஜ் குழு மற்றும் வக்பு சபைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படுமா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குபதிலளிக்கும் போதே அமைச்சரவை பேச்சாளர் விஜித்த ஹேரத் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், முஸ்லிம் யாத்திரிகர்களது ஹஜ் வணக்க வழிபாடுகளுக்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகவுள்ளன. அதற்கான பணிகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். அதேபோல அரசாங்கம் ஹஜ் குழு மற்றும் வக்பு சபைகளில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் எம்மால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.
ஹஜ் குழு மற்றும் வக்பு சபைகளில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு வெவ்வேறு தரப்பினர்களிடமிருந்து எமக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளன. இதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் எமக்கு நீண்ட காலம் எடுக்கும். நாம் அதனை செய்ய முற்பட்டால் முஸ்லிம் யாத்திரிகர்கள் ஹஜ் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதில் சிக்கல் நிலை ஏற்படும். எனவே இந்த சந்தர்ப்பத்தில் நாம் அதனை செய்யப்போவதில்லை. எனினும் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து தீர்மானம் எடுக்க எதிர்பார்த்துள்ளோம்.
அதேபோன்று ஹஜ் யாத்திரிகர்களுக்கு எந்தவித இடையூறுகளும் ஏற்படமாட்டாது. அவர்களுக்கான விசா வசதிகளைப் பெற்றுக் கொடுக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இலங்கை அரச ஹஜ் குழு கட்டமைப்புக்குள் அதிகளவிலான முறைகேடுகள் உள்ளன. நிச்சயம் நாம் அதனை மாற்றுவோம். ஒரே தடவையில் இந்த கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவது சிரமமாகும்.
குறிப்பாக சிலருக்கு அவர்களது தனிப்பட்ட தேவைகள் விருப்பங்கள் உள்ளன. அவற்றை சுட்டிக்காட்டி பதவிகளை பெற்றுக் கொள்ளவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என நாம் அறிந்துள்ளோம். இது தொடர்பில் தெளிவுப்படுத்த வருபவர்களும் நல்லவர்கள் அல்லர். அப்படியான சிலர் என்னை சந்திக்க வந்தனர். இவர்கள் இந்த கட்டமைப்பை மாற்றுமாறு கோரிக்கை விடுத்தனர். நான் அவர்களின் பெயர்களை கூற விரும்பவில்லை. ஆனால் என்னால் கூற முடியும்.எனவே நாம் இந்த விடயம் தொடர்பில் மிகவும் ஆழமான ஆராய்ந்து தீர்மானம் எடுப்போம்.
எதிர்காலத்தில் சிறந்த ஹஜ் குழு மற்றும் வக்ப் சபைகளை ஸ்தாபிப்போம். இந்த வேலைத் திட்டங்களை முறையாக நாம் முன்னெடுத்துச் செல்வோம். குறைபாடுகள் உள்ளன. இந்த சந்தர்ப்பத்தில் நாம் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சித்தால் ஹஜ் யாத்திரிகர்களுக்கு தமது வணக்க வழிபாடுகளை மேற்கொள்ள முடியாமல் போகும் என்றார்.
Vidivelli
No comments:
Post a Comment