கோட்டா, ரணில் வழியிலேயே அநுர பயணிக்கிறார் : குறைப்பதற்கு பெரும்பான்மை அவசியமில்லை - குற்றம் சாட்டும் சஜித் பிரேமதாஸ - News View

About Us

About Us

Breaking

Monday, November 11, 2024

கோட்டா, ரணில் வழியிலேயே அநுர பயணிக்கிறார் : குறைப்பதற்கு பெரும்பான்மை அவசியமில்லை - குற்றம் சாட்டும் சஜித் பிரேமதாஸ

கோட்டாபயவினதும், ரணிலினதும் வழியிலேயே இன்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் பயணிப்பதாக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டியுள்ளார்.

2024 பொதுத் தேர்தலை இலக்காக் கொண்டு இரத்தினபுரி மாவட்ட மக்கள் சந்திப்பு இன்றையதினம் (11) ஐக்கிய மக்கள் சக்தியினதும், ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் தலைவரான சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஹேஷா விதானகேவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சந்திப்பில் கட்சி செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், குழந்தைகள் மற்றும் தாய்மார்களை பாதிக்கும் தீர்மானத்தை அரசாங்கம் எடுத்துள்ளது. வறுமைக்கு ஆளாகக்கூடிய ஒரு முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது. ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்கு, 5 வயதுக்குட்பட்ட எடை குறைவான குழந்தைகள், இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் திரிபோஷாவைப் பெற்று வருகின்றனர்.

மாதம் ஒன்றுக்கு 16 இலட்சம் பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது 664,920 தாய்மார்களுக்கும் 925,172 குழந்தைகளுக்கும் இது வழங்கப்பட்டு வருகின்றன.

தற்போதைய ஜனாதிபதி பதவியேற்ற பின்னர், 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் இலக்கம் 2403/53 மூலம் திரிபோஷ நிறுவனத்தை கலைப்பதற்கு அல்லது வேறு நிறுவனத்துடன் இணைப்பதற்கு தீர்மானம் எடுத்துள்ளார் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று 7 நாட்களுக்கு முன்னரே, திரிபோஷ நிறுவனத்தை மூடுவதற்கு அரச வர்த்தமானி மூலம் வேறு நிறுவனத்திற்கு மாற்றுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நிறுவனத்தை கலைப்பதற்காக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இன்று அவர்கள் வேறு அறிவிப்புகளை வெளியிட்டு அதனை மூடமாட்டோம் என்கின்றனர். அவ்வாறு மூடாவிட்டால் வர்த்தமானியை மீளப் பெறுமாறு சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் திரிபோஷ நிறுவனத்தை தனியார் மயமாக்க நடவடிக்கை எடுத்தபோது ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தில் பெரும் குரல் எழுப்பி அதனை தடுத்து நிறுத்தியது.

தற்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும், கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் அடிச்சுவடுகளையே பின்பற்றி வருகிறார் என சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்க மேடை மேடையாக கூறியவை தற்போது ஜனாதிபதியாக அனைத்தும் பொய்யாகி, செயலில் நடத்திக் காட்ட தோல்வி கண்டுள்ளார் என்பதை அவரே நிரூபித்துள்ளார்.

வரி குறைக்கப்படும், விலை சூத்திரங்கள் இல்லாதொழிக்கப்படும், உகண்டாவில் பதுக்கி வைத்துள்ள பணம் கொண்டுவரப்படும் என்று மேடைகளில் கூச்சலிட்டாலும், இறுதியில் ஜனாதிபதி தலைமையிலான ஜே.வி.பி அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் மண்டியிட்டு எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அடிமையாகியுள்ளது.

சாதாரண மக்கள் பயன்படுத்தும் எரிபொருட்களுக்கான விலையை குறைக்க வாய்ப்புள்ள நிலையில், அதை செய்யாமல் உயர் வர்க்கத்தினர் பயன்படுத்தும் எரிபொருளுக்கு மட்டும் இந்த வரியை குறைத்துள்ளனர். இவற்றைக் குறைப்பதற்கு நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை அவசியமில்லை. நிறைவேற்று ஜனாதிபதியால் இதனை இலகுவாகச் செய்ய முடியும்.

கடவுச்சீட்டு வரிசை, தேங்காய் வரிசை, அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வொன்றை வழங்க முடியாத இந்த அரசாங்கம் ஏனைய பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வை வழங்கப்போகிறது என சஜித் பிரேமதாச இங்கு கேள்வி எழுப்பினார்.

மின் கட்டணத்தை 66% குறைக்கலாம் என்று தெரிவித்தார். ஆட்சிக்கு வந்தும் அவர் கூறியவாறு இதனை குறைக்கவில்லை. இவற்றைச் செய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் தேவையில்லை. அதிக ஊழல் காரணமாகவே மின் கட்டணம் அதிகரித்து காணப்படுவதாக தெரிவித்தார். ஆட்சிக்கு வந்து இன்றுவரை அவரால் மின் கட்டணத்தை குறைக்க முடியவில்லை.

தேர்தல் காலப்பிரவில் மக்களின் எதிர்பார்புகளை உச்சத்துக்கு கொண்டுவந்து, இன்று ஆட்சிக்கு வந்தும் தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது, மக்கள் அபிலாஷைகள் நீர்மூலமாக்கியுள்ளார் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

வரிச் சுமையைக் குறைப்போம் என தெரிவித்த தற்போதைய ஜனாதிபதி சர்வதேச நாணய நிதியத்துடன் இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார். ஆனால் அவை அனைத்தும் தோல்வியடைந்து சர்வதேச நாணய நிதியத்தின் முன் கைதியாகியுள்ளார்.

இந்த உடன்படிக்கையை ஜனாதிபதியால் மாற்ற முடியாத போதிலும், ஐக்கிய மக்கள் சக்தியால் இணக்கப்பாட்டை மாற்றியமைக்க முடியும். அதற்கான இயலுமை எம்மிடம் காணப்படுகிறது. அதற்கான வேலைத்திட்டம் எம்மிடம் காணப்படுகிறது என சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

4 வருடங்களில் கடனை செலுத்த வேண்டும். 2033 ஆம் ஆண்டு முதல் கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை முன்னாள் ஜனாதிபதி 2028 ஆக குறைத்தார். 2028 க்குள் கடனை அடைக்கும் பொருளாதார சூழ்நிலையை உருவாக்க வேண்டும். இல்லையெனில், 2028 இல் மீண்டும் வங்குரோத்தடைவோம். எனவே புதிய ஒப்பந்தத்திற்கு செல்ல வேண்டும்.

எதிர்க்கட்சியில் இருந்து கொண்டே ஐக்கிய மக்கள் சக்தி சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி பல புரிந்துணர்வுகளை எட்டியுள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

No comments:

Post a Comment