தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் ஐந்து வாரங்களுக்கானது இல்லை - விஜித ஹேரத் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 7, 2024

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் ஐந்து வாரங்களுக்கானது இல்லை - விஜித ஹேரத்

தேசிய மக்கள் சக்தியின் விஞ்ஞாபனம் ஐந்தாண்டுகளுக்குள் பூர்த்தி செய்யப்படும் எனத் தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத், விஞ்ஞாபனம் ஐந்து வாரங்களுக்கானது அல்ல என்றும் தெரிவித்தார்.

வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக எதிர்க்கட்சி  அரசியல்வாதிகள் சிலர் குற்றஞ்சாட்டி வருவதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே,  அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறிய விடயங்கள் ஐந்தாண்டுகளில் பூர்த்தி செய்வதற்கானதாகும்.

சஜித் பிரேமதாச போன்ற சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கூறுவது போன்று, ஐந்து வாரங்களுக்குள் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது.

நாங்கள் இன்னும் பல முடிவுகளை எடுக்க வேண்டும். ஐந்தாண்டுகளுக்குத் திட்டமிடப்பட்ட ஒரு பணியை ஐந்து வாரங்களுக்குள் முடிக்க முடியாது. தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபன அறிக்கை ஐந்தாண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும். நாங்கள் இன்னும் அரசாங்கத்தை அமைக்கவில்லை. 

கடந்த ஐந்து வாரங்களுக்குள் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் முக்கிய முடிவுகளை எடுத்ததை வைத்து அரசாங்கம் கவிழ்ந்துவிடும் என எதிர்க்கட்சிகள் பகல் கனவு காண்கின்றன. 

நூற்றுக்கணக்கான அமைச்சர்கள் இருந்தும் பொருளாதார பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறிய நிலையில், இறுதியில் நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியுள்ளனர். 

இருப்பினும் தற்போது மூன்று அமைச்சர்கள் மட்டுமே நாட்டை இயக்குகின்றனர். நாங்கள் இப்போது ஒரு புதிய பாதையில் பயணிக்கிறோம். 

ஊழல்மிக்க அரசியல் கலாசாரம், மோசடி போன்ற விடயங்களே பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment