சவால் விடுக்கும் பிரதான அரசியல் கட்சியாக எழுச்சி பெறுவோம் : மூன்றாம் இலக்கம் அதிஷ்டமானது என்கிறார் சானக - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 20, 2024

சவால் விடுக்கும் பிரதான அரசியல் கட்சியாக எழுச்சி பெறுவோம் : மூன்றாம் இலக்கம் அதிஷ்டமானது என்கிறார் சானக

(இராஜதுரை ஹஷான்)

2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடுக்கும் பிரதான அரசியல் கட்சியாக நாங்கள் எழுச்சி பெறுவோம். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நம்பிச் சென்று தோல்வியடைந்தவர்கள் எம்முடன் இணைந்து கொள்ளலாம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, பாரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளார்கள். கடந்த கால அரசாங்கங்கள் மற்றும் ராஜபக்ஷர்கள் தொடர்பிலும் ஜனாதிபதி பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் அதேபோல், குற்றச்சாட்டுக்களை சட்டத்தின் முன் நிரூபிக்கவும் வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை கொண்டு அரசியல் ஸ்திரத்தன்மையை தீர்மானிக்க முடியாது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்துடன் பாராளுமன்றத்துக்கு வந்து ஜனாதிபதியானார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 3 பாராளுமன்ற ஆசனங்களை வைத்துக் கொண்டுதான் ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் வெற்றி பெற்றார். மூன்றாம் இலக்கம் அதிஷ்டமானது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மூன்று ஆசனங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடுக்கும் பிரதான அரசியல் கட்சியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எழுச்சி பெறும்.

நாட்டின் நலன் கருதி அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற வகையில் ஆதரவளிப்போம். மக்கள் விடுதலை முன்னணியை போன்று அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளையும் எதிர்க்கும் எதிர்க்கட்சியாக செயற்படப்போவதில்லை.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நம்பிச் சென்று ஏமாற்றமடைந்து அரசியலில் நெருக்கடிக்குள்ளாகியுள்ளவர்கள் மீண்டும் எம்முடன் கொள்கை அடிப்படையில் இணைந்து கொள்ளலாம். வெறுப்புக்களை முன்னிலைப்படுத்தி செயற்படப் போவதில்லை என்றார்.

No comments:

Post a Comment