கண்ணில் சிறிது காயம் ஏற்பட்டால் கூட அதனை அலட்சியம் செய்ய வேண்டாம் என இலங்கை நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள முதலாவது விழிப்புலன் இழந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா தான் கண் பார்வை இழந்த கதையை ஊடகமொன்றுடன் பகிர்ந்துகொண்டுள்ளதுடன், 11 வயதில் கிரிக்கெட் விளையாடும்போது பந்து கண்ணில் பட்டதால்தான் கண் பார்வையை இழந்ததாக தெரிவித்துள்ளார்.
பந்தை பிடிப்பதற்கு எனது கரங்களை பயன்படுத்தாதது என் முதல் தவறு. இரண்டாவது தவறு என் காயங்களை குடும்பத்தவருக்கு மறைத்தது என தெரிவித்துள்ள அவர், இதுவே நான் கண் பார்வையை இழக்கும் நிலையை ஏற்படுத்தியது என குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் கண்ணில் சிறு தூசி விழுந்தால் கூட மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்பதே எனது அறிவுரை. இந்த காயங்கள் நாங்கள் எதிர்பாராத பாதிப்பை ஏற்படுத்தலாம் என சுகத் வசந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
கண் பார்வை இழந்தவர்களின் வாழ்க்கை மிகவும் சவாலானது; கடினமானது. இவ்வாறான கண் காயங்களை புறக்கணித்தால் மக்களால் அதிலிருந்து மீள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி இவரை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment