பதுளை மாவட்டத்தில் கடும் மழை ! ஓடைகளும், ஆறுகளும் பெருக்கெடுப்பு ! மக்கள் பாதிப்பு ! - News View

About Us

About Us

Breaking

Friday, November 8, 2024

பதுளை மாவட்டத்தில் கடும் மழை ! ஓடைகளும், ஆறுகளும் பெருக்கெடுப்பு ! மக்கள் பாதிப்பு !

பதுளை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (08) பெய்த கடும் மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், வெள்ள அபாயமும் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், தொடர் மழை காரணமாக பதுளு ஓயா ஆறு பெருக்கெடுத்ததால் பதுளை நகரை அண்டிய விஹாரகொடை பகுதியில் உள்ள சுமனதிஸ்ஸகம பகுதியில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது .

இதன் காரணமாக இப்பகுதிகளில் உள்ள சுமார் 50 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பதுளு ஓயா ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் வீடுகளுக்குப் புகுந்த வெள்ளநீர் வடிந்தோடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை ஹாலிஎல - வெளிமடை பிரதான வீதியின் 100ஆவது கிலோ மீற்றருக்கு அருகே மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இப்பாதையின் ஊடாக போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகளை அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையின் காரணமாக பதுளை - செங்கலடி வீதி உட்பட பல பிரதான வீதிகளில் ஆங்காங்கே சிறியளவில் மண்மேடுகள் சரிந்துள்ளன.

அட்டாம்பிட்டிய, அப்புத்தளை மற்றும் பண்டாரவளை ஆகிய பகுதிகளில் பனிமூட்டமான வானிலை நிலவி வருகிறது. மாவட்டத்தின்பல பகுதிகளில் இடைக்கிடையில் மின்சாரத் தடை ஏற்பட்டிருந்தது.

பசறை, ஹாலிஎல மற்றும் ஹல்துமுல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் மண்சரிவு அனர்த்தம் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

பசறை-மீதும்பிட்டிய பகுதியில் கடும் காற்று, மழையுடன் கூடிய வானிலை நிலவி வருகின்றது. தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக ஓடைகளும், ஆறுகளும் பெருக்கெடுத்துள்ளன.

No comments:

Post a Comment