பொதுத் தேர்தல் பணிகள் மற்றும் பாதுகாப்பு நிமித்தம் பொலிஸார் உட்பட முப்படையினர் உள்ளடங்களாக சுமார் 90 ஆயிரம் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமைகளில் ஈடுபடவுள்ளனர். தேர்தல் மற்றும் பொதுச் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வாக்களிப்பு முடிவடைந்த பின்னரும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செயற்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் திங்கட்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுத் தேர்தல் குறித்து தெளிவுபடுத்துகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்ட காலத்தில் இருந்து இன்று வரை தேர்தலுடன் தொடர்புடைய பாரதூரமான சம்பவங்கள் ஏதும் பதிவாகவில்லை. கடந்த காலங்களை காட்டிலும் இம்முறை சுமுகமான தன்மையே காணப்படுகிறது.
தேர்தலுடன் தொடர்புடையதாக பொலிஸ் நிலையங்களுக்கு 496 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இக்காலப்பகுதியில் மாத்திரம் 478 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த எண்ணிக்கையில் 14 வேட்பாளர்கள் அடங்குகின்றனர். அத்துடன் 116 வாகனங்கள் பொலிஸாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன.
வேட்பாளர் ஒருவர் வாக்காளர்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது சட்டவிரோதமானது. விசேட தேவையுடையவர்கள், வயதுமுதிர்ந்தோர் ஆகியோருக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதாயின் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்திடம் முன்கூட்டியதாகவே அனுமதி பெற வேண்டும்.
தேர்தல் பணிகளின் நிமித்தம் 63,145 பொலிஸ் உத்தியோகஸத்தர்கள் நேரடியாக கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அத்துடன் 3200 விசேட அதிரடிப் படையினரும், 6000 இணை சேவை உத்தியோகத்தர்களும்,11 ஆயிரம் முப்படையினரும், 12227 சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.
3109 நடமாடும் சேவைகளும், வாகன சோதனைகளுக்காக 269 வீதி தடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. 1591 தற்காலிக தொழிலாளர்கள் கடமைகளுக்காக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். பாதுகாப்பு கடமைகளுக்காக 4525 வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
பொதுத் தேர்தல் பணிகள் மற்றும் பாதுகாப்பு நிமித்தம் பொலிஸார் உட்பட முப்படையினர் உள்ளடங்களாக சுமார் 90 ஆயிரம் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமைகளில் ஈடுபடவுள்ளனர்.
தேர்தல் மற்றும் பொதுச் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வாக்களிப்பு முடிவடைந்த பின்னரும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செயற்படுத்தப்படும் என்றார்.
No comments:
Post a Comment