இஸ்ரேல் மீது அதிரடி தாக்குதல் மேற்கொண்ட ஈரான் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 1, 2024

இஸ்ரேல் மீது அதிரடி தாக்குதல் மேற்கொண்ட ஈரான்

ஈரானிடம் இருந்து ஏவுகணை தாக்குதல் விரைவில் நடக்கலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ள நிலையில், இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவுகணைகளை ஏவியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது 100 ற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி ஈரான் தாக்குதலை தொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானில் இருந்து சுமார் 200 ஏவுகணைகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவ வானொலி தெரிவித்துள்ளது.

அவற்றை வீழ்த்துவதற்காக இடைமறிக்கும் ஏவுகணைகள் ஏவப்பட்டதால் இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்துள்ளதாகவும் அது கூறுகிறது.
இஸ்ரேலியர்களை எச்சரிக்கையாக இருக்கவும், பாதுகாப்பு படை வீரர்களின் அறிவுறுத்தல்களின்படி நடக்குமாறும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

சைரன் சத்தம் கேட்டவுடன், ''நீங்கள் ஒரு பாதுகாக்கப்பட்ட இடத்திற்குள் நுழைந்து, மறு அறிவிப்பு வரும் வரை அங்கேயே இருக்க வேண்டும்" எனவும் அது கூறியுள்ளது.

இதற்கிடையே இஸ்ரேலின் டெல் அவிவ் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள பொலிஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பிரதான சர்வதேச விமான நிலையமான Ben Gurion இல் புறப்படுதல் மற்றும் தரையிறக்கங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவ வானொலி தெரிவித்துள்ளது.

அண்டை நாடான ஜோர்டானின் வான் பரப்பும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் அரசு நடத்தும் செய்தி நிறுவனமான IRNA தெஹ்ரானின் இராணுவம் இஸ்ரேலை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவத் தொடங்கியுள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

ஈரானிய அரசு தொலைக்காட்சி IRGC (இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை) யின் அறிக்கையை வெளியிட்டது, இஸ்ரேலை நோக்கி "டசின் கணக்கான" ஏவுகணைகள் ஏவப்பட்டதை உறுதிப்படுத்தியது. மேலும் இஸ்ரேல் பதிலளித்தால் தாக்குதல் தொடரும் என எச்சரித்துள்ளது.
ஜூலை மாதம் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே மற்றும் கடந்த வெள்ளிக்கிழமை ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதற்கு பதிலடியாகவும் மற்றும் லெபனான், பலஸ்தீன மக்களை கொன்றதற்கு பதிலடியாகவும் இந்த ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படுவதாக புரட்சிகர காவலர் படையினர் விவரிக்கின்றனர்.

அதன் விமானப்படை இஸ்ரேலின் "முக்கியமான தளங்களை" குறிவைத்துள்ளதாகவும், அதன் விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

இதேவேளை இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை ஏவுவதற்கான உத்தரவை ஈரானின் உச்ச தலைவர் அலி கொமேனி விடுத்ததாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தெஹ்ரான் "எந்தவொரு பதிலடிக்கும் முழுமையாக தயாராக உள்ளது" என்று ஒரு அதிகாரி மேலும் கூறினார்.
ஈரான் இராணுவ வானொலியின் அறிக்கைகளின்படி, கிட்டத்தட்ட 200 ஏவுகணைகள் ஈரானில் இருந்து இஸ்ரேல் மீது ஏவப்பட்டுள்ளன.

இதற்கு முன்பாக தெற்கு லெபனானில் இஸ்ரேல் படையெடுப்பை தொடங்கியது.

"நாங்கள் தெற்கு லெபனானில் தரைவழி ராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போகிறோம். தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா நிலைகளை குறிவைப்போம். இந்த ராணுவ நடவடிக்கை வரம்புக்குப்பட்டதாக இருக்கும். இந்த இலக்குகள் எல்லையோர கிராமங்களில் உள்ளன.” என இஸ்ரேல் ராணுவம் கூறியிருந்தது.

No comments:

Post a Comment