லெபனான் மீது வான் தாக்குதல் ! ஹிஸ்புல்லா தலைவர் பலி ! இஸ்ரேல் இராணுவம் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, September 28, 2024

லெபனான் மீது வான் தாக்குதல் ! ஹிஸ்புல்லா தலைவர் பலி ! இஸ்ரேல் இராணுவம் தெரிவிப்பு

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஷேக் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்தும், லெபனானில் ஹிஸ்புல்லா இலக்குகளை குறிவைத்து தாக்கி வருவதாக இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது. 

அதேநேரத்தில், ஹிஸ்புல்லா தரப்பும் இஸ்ரேலுக்கு எதிராக ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

ஹஸன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுவிட்டார் என்ற இஸ்ரேல் இராணுவத்தின் அறிவிப்பை இதுவரை ஹிஸ்புல்லா உறுதி செய்யவோ அல்லது மறுக்கவோ, வேறு ஏதேனும் கருத்து சொல்லவோ இல்லை.

முன்னதாக, வெள்ளிக்கிழமை மாலை ஹிஸ்புல்லா தலைமையகத்தை குறிவைத்து துல்லிய தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்திருந்தார். 

இந்த தாக்குதலால் என்ன பலன் கிடைத்தது என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக அவர் கூறினார். ஹிஸ்புல்லா தலைமையகத்தை தாக்கியதாக கூறினாலும், ஹிஸ்புல்லா தலைவர் ஹஸன் நஸ்ரல்லா பெயரையோ, அவர்தான் தாக்குதலின் இலக்காக இருந்தார் என்றோ அவர் ஏதும் குறிப்பிடவில்லை.

ஆனால், இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலின் இலக்கு ஹிஸ்புல்லா தலைவர் ஹஸன் நஸ்ரல்லா என்று பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் உள்ளிட்ட அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. 

இருப்பினும், இஸ்ரேல் தாக்குதலுக்கு இலக்கான கட்டடத்தில் நஸ்ரல்லா இருந்தாரா என்பது குறித்து எந்தவொரு உறுதியான தகவலும் இல்லாமல் இருந்தது.

ஹிஸ்புல்லா இயக்கத்தின் மற்ற மூத்த தலைவர்கள் கொல்லப்பட்டதாக லெபனான் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியை உறுதி செய்ய முடியவில்லை என்று அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பில் முன்கூட்டியே தங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும், இந்த மோதல் மேலும் தீவிரமாகும் வாய்ப்பு இருப்பது குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஹிஸ்புல்லா தலைவர் ஷேக் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF-ஐடிஎப்) தெரிவித்துள்ளது.

ஐடிஎப்-இன் எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு அறிக்கையில், “ஹசன் நஸ்ரல்லா இனி உலகத்தை அச்சுறுத்த முடியாது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ரூட்டில் ஒரே இரவில் நடந்த தொடர்ச்சியான இஸ்ரேலிய தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நஸ்ரல்லா மற்றும் பிற ஹிஸ்புல்லா தளபதிகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறியது.

ஹெஸ்பொலாவின் மத்திய தலைமையகத்தின் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும், ஹெஸ்பொலாவின் இந்த தளம் பெய்ரூட்டின் தாஹிஹ் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் கீழே செயல்பட்டு வந்ததாகவும் ஐடிஎப் கூறியது.

இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் (ஐடிஎப்) தலைமை அதிகாரி, லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி, ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்.

“நாங்கள் கூற வரும் செய்தி மிகவும் தெளிவானது. இஸ்ரேலிய குடிமக்களை யார் அச்சுறுத்தினாலும், அவர்களை எப்படி பிடிப்பது என எங்களுக்கு தெரியும். வடக்கு, தெற்கு அல்லது அதற்கு அப்பால் என அவர்கள் எங்கு சென்றாலும் சரி” என்று அதில் அவர் கூறியுள்ளார்.

ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக அறிக்கை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே இந்த காணொளி ஐடிஎப்-இன் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிடப்பட்டது.

No comments:

Post a Comment