தமிழரசுக் கட்சியின் ஆதரவு சஜித் பிரேமதாசவிற்கே : பொது வேட்பாளர் அரியநேந்திரன் விலக வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Sunday, September 1, 2024

தமிழரசுக் கட்சியின் ஆதரவு சஜித் பிரேமதாசவிற்கே : பொது வேட்பாளர் அரியநேந்திரன் விலக வேண்டும்

ஜனாதிபதி தேர்தலில் தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதுடன், பொது வேட்பாளர் அரியநேந்திரன் போட்டியில் இருந்து விலக வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று (01) பல மணி நேரமாக வவுனியா இரண்டாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றது. அதன்பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், மத்திய குழுக் கூட்டம் பல மணி நேரமாக இடம்பெற்றது. இதில் மூன்று தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பா.அரியநேந்திரனை ஆதரிப்பதில்லை என தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. 

அத்துடன், எமது கட்சி உறுப்பினராகிய அரியநேந்திரன் ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுமாறு நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் 2024 இல் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு கொடுப்பதாக தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. 

இதுவரை எமது கட்சி தீர்மானம் எதனையும் அறிவிக்காமையால் கட்சி உறுப்பினர்கள் பலவாறாக செயற்பட்டனர். தற்போது தீர்மானம் எடுக்கப்பட்டு சஜித்திற்கு ஆதரவளிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்னதால் கட்சி உறுப்பினர்கள் அதற்கேற்ப செயற்படுவார்கள் எனத் தெரிவித்தார்.

வவுனியா விசேட நிருபர்

No comments:

Post a Comment