தேர்தல் காலங்களில் தோட்ட மக்களை இலக்கு வைத்து தரமற்ற மது விநியோகம்? : மறுப்புத் தெரிவித்து அமைச்சர் ஜீவன் அறிக்கை - News View

About Us

About Us

Breaking

Friday, August 23, 2024

தேர்தல் காலங்களில் தோட்ட மக்களை இலக்கு வைத்து தரமற்ற மது விநியோகம்? : மறுப்புத் தெரிவித்து அமைச்சர் ஜீவன் அறிக்கை

தேர்தல் காலங்களில் பெருந்தோட்ட மக்களை இலக்கு வைத்து தரமற்ற மது விநியோகங்களை மலையக தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும், இ.தொ.கா. பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

ஜனநாயக சீர்திருத்தம் மற்றும் தேர்தல் ஆய்வுகள் அலுவலகத்தின் நிர்வாக பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்கவினால் தொலைக்காட்சி செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்ட குறித்த கருத்து தொடர்பில் கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இன்றைய காலக்கட்டத்தில் பெருந்தோட்ட சமூகத்தை பொறுத்தவரையில் கல்வியிலும் சரி, ஏனைய துறைகளிலும் சரி வளர்ச்சியடைந்து வரும் சமூகமாக காணப்படுகின்றது. ஆனால் ஒரு சில அரசியல் நபர்களுக்காகவும், அரசியல் கட்சிகளுக்கு சார்பாகவும் தனிநபர்களால் குரல் எழுப்பி மலையகத்தை இலக்கு வைத்து தவறான கருத்துக்களை ஊடகத்தின் ஊடாக வெளிப்படுத்தி வருகின்றார்கள்.

இதற்கு அப்பால் எவ்வாறு வாக்களிக்க வேண்டும், யாருக்கு வாக்களிக்க வேண்டும், யாருக்கு வாக்களிப்பதன் ஊடாக மலையக மக்களின் வாழ்க்கை சுபீட்சமாக அமையும் என்று அவர்களுக்கு நன்றாக தெரியும். 

அதாவது ஒரு சில பகுதிகளில் இவ்வாறான தவறான செயற்பாடுகள் இடம்பெறுமாயின் நுவரெலியா மாவட்டத்தை பொறுத்த வரையில் எந்த ஒரு தொழிற்சங்கமும் இவ்வாறான கீழ்த்தரமான செயல்பாடுகளை செய்வதற்கு உடன்படபோவதும் இல்லை. இதற்கு மக்களும் தயார் நிலையில் இல்லை. 

எனவே, தேர்தல் காலங்களில் இவ்வாறான பொய்யான தேர்தல் பிரச்சாரங்களை பரப்பி அவர்களை பலப்படுத்திக் கொள்வதற்காக கருத்துக்களை ஊடகத்தின் ஊடாக வெளிப்படுத்தி வருகின்றார்கள்.

ஆனால், அவர்களுக்கான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு மலையகத்தில் இருக்கும் அனைத்து தொழிற்சங்கமும் தம்முடைய எதிர்ப்பை தெரிவிப்பதுடன், சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலமான ஒன்றிணைந்த மனுவையும் கையளிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment