உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்படாமை மனித உரிமை மீறல் : உடன் நடத்த நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் தீர்ப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, August 22, 2024

உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்படாமை மனித உரிமை மீறல் : உடன் நடத்த நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் தீர்ப்பு

உள்ளூராட்சி தேர்தலை உரிய காலத்தில் நடத்தாமல் விட்டதன் மூலம் ஜனாதிபதியும், தேர்தல் ஆணைக்குழுவும் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக இன்று (22) தீர்ப்பளித்துள்ள உயர் நீதிமன்றம், விரைவில் உள்ளூராட்சி தேர்தலை நடத்தவேண்டுமெனவும் தேர்தல் ஆணையத்தை பணித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தல் ஒத்திவைப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஆராய்ந்த உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிற்போடப்பட்டதன் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகளை தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று (22) தீர்ப்பளித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம், PAFFREL அமைப்பு என்பன தாக்கல் செய்திருந்த 4 மனுக்கள் மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் இன்று அறிவித்தது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, உயர் நீதிமன்ற நீதியரசர்களான விஜித் மலல்கொட, முர்து பெர்னாண்டோ, காமினி அமரசேகர, யசந்த கோதாகொட ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

கடந்த வருடம் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படாமையால், தமது அடிப்படை உரிமைகளும் மக்களின் அடிப்படை உரிமைகளும் மீறப்பட்டுள்ளதாக உத்தரவிடுமாறு மனுதாரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ரஞ்சித் மத்தும பண்டார, தேசிய மக்கள் சக்தி சார்பில் ஹரினி அமரசூரிய, சுனில் ஹந்துன்நெத்தி, PAFFREL அமைப்பு சார்பில் ரோஹன ஹெட்டியராரச்சி மற்றும் மாற்றுக்கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தினால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மனுக்களில் தேர்தல் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.

மனுக்கள் மீதான விசாரணையை ஜூன் மாதம் 6ஆம் திகதி முடிவுக்கு கொண்டு வந்த உயர் நீதிமன்றம், தீர்ப்பை திகதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்த நிலையிலேயே இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய, தேசிய மக்கள் சக்தி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நைஜல் ஹெஜ், மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி விரான் கொரயா மற்றும் PAFFREL அமைப்பு சார்பில் சட்டத்தரணி அஸ்டிக்க தேவேந்திர ஆகியோர் மன்றில் ஆஜராகினர்.

சட்டமா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின்புள்ளே ஆஜரானதுடன், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மற்றும் அதன் உறுப்பினர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

No comments:

Post a Comment