(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதி தேர்தல் உரிய காலத்தில் நடக்கும். தேர்தல் நடத்தப்படுவதற்கு அரசாங்கம் எந்த வகையிலும் தடைகளை ஏற்படுத்தப்போவதில்லை. அதேநேரம் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு தற்போது எந்த தேவையும் இல்லை என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள் மாகாணசபைகள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) நிலையியற் கட்டளை 27 இன் 2கீழ் எதிர்க்கட்சி உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அத்துரலியே ரத்தன தேரர் தனது கேள்வியில், ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. அரசியலமைப்பின் 22ஆம் திருத்தத்தை ஜனாதிபதி கையில் எடுத்துள்ளதாலே இந்த சந்தேகம் எழுந்துள்ளது. அதேபோன்று ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறதா என்றார்.
அதற்கு இராஜாங்க அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில், ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்தினால் எந்த வகையிலும் தடைகளை ஏற்படுத்தப்போவதில்லை. ஜனாதிபதி தேர்தலை நிச்சயமாக நடத்துவோம்.
இந்த மாதம் 17ஆம் திகதியுடன் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அது தொடர்பான அதிகாரம் கிடைக்கப் பெற்றிருக்கிறது. அதனை நிறுத்த யாருக்கும் முடியாது.
அரசாங்கம் என்ற வகையில் தேர்தலுக்கு தேவையான பணத்தையும் வழங்கி இருக்கிறோம். அதனால் இந்த வாரத்துக்குள் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறக்கூடிய திகதியை தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பதாக தெரிவித்திருக்கிறது. அதனால் ஜனாதிபதி தேர்தல் மிகவும் அண்மையில் இருக்கும் ஒரு திகதியில் இடம்பெறும் என்ற உறுதியை வழங்குறேன்.
அத்துடன் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு தற்போதைக்கு அவசியம் இல்லை. அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி வரை பாராளுமன்றத்துக்கான காலம் இருக்கிறது. என்றாலும் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரம் இருக்கிறது. அதனால் தற்போதைக்கு பாராளுமன்றத்தை கலைக்கும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை.
மேலும், மாகாண சபை தேர்தல் தொடர்பில் நான்கு வழக்குகள் விசாரணையில் இருக்கின்றன. சுமந்திரன் எம்.பியின் பிரேரணைக்கு அமைய விகிதாசார (பழைய) முறைக்கு தேர்தலை நடத்த நாங்களும் ஆதரவளிப்போம். என்றாலும் மாகாண சபை தேர்தல் தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பு மிக விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் செயற்பட நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.
No comments:
Post a Comment