பிரித்தாளும் தந்திரம் மூலம் ரணில், ராஜபக்ஸ அரசாங்கம் பிரிக்க முற்படுகின்றது - இலங்கை ஆசிரியர் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Monday, July 8, 2024

பிரித்தாளும் தந்திரம் மூலம் ரணில், ராஜபக்ஸ அரசாங்கம் பிரிக்க முற்படுகின்றது - இலங்கை ஆசிரியர் சங்கம்

பாறுக் ஷிஹான்

ரணில், ராஜபக்ஸ அரசாங்கம் அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பினை அரசியல் கட்சிகளை பிரித்தாளுதல் போன்று ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பினையும் பிரித்தாளும் தந்திரம் மூலம் பிரிக்க முற்படுகின்றது. வடக்கு கிழக்கு ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என தெரிவிப்பதன் ஊடாக சிங்கள பகுதி மக்களிற்கு ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தினை கொண்டுவர எதிர்பார்க்கின்றது என இலங்கை ஆசிரியர் சங்க கல்முனை கல்வி வலய இணைப்பாளர் ஏ.எம்.எம்.சாஹிர் தெரிவித்தார்.

சம்பள முரண்பாட்டை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி நாளை (9) சுகயீன விடுமுறை போராட்டத்தில் சகல ஆசிரியர்கள் அதிபர்களும் போராட தயாராக வேண்டும் என ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு திங்கட்கிழமை (9) மாலை விசேட செய்தியார் சந்திப்பு ஒன்றினை அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது அல்-கமரூன் வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்தபோது அதில் கலந்துகொண்டு பின்வருமாறு குறிப்பிட்டார்.

மேலும் அங்கு அவர் குறிப்பிட்டதாவது, ஜனாதிபதி ரணில், ராஜபக்ஸ அரசாங்கம் அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பினை அரசியல் கட்சிகளை பிரித்தாளுதல் போன்று ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பினையும் பிரித்தாளும் தந்திரம் மூலம் பிரிக்க முற்படுகின்றது.

வடக்கு கிழக்கு ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிப்பதன் ஊடாக சிங்கள பகுதி மக்களிற்கு ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தினை கொண்டுவர எதிர்பார்க்கின்றது.

எனவே இந்த அரசாங்கத்திற்கு 26 மற்றும் 27 போராட்டம் தொடர்பில் ஒன்றினை தெரிவிக்க விரும்புகின்றோம். வெற்றி பெற்ற எமது போராட்டத்தை கொச்சைப்படுத்துவதற்கே இவ்வாறான பிரித்தாளும் தந்திரத்தை எம்மத்தியில் திணிப்பதை நாம் அறிவோம்.

எனவே இந்த ஆசிரியர்களது நியாயமான போராட்டத்திற்கு செவி சாய்த்து எதிர்காலத்தில் இப்போராட்டம் உக்கிரம் அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பணமில்லை என்று கூறிக்கொண்டு நிறைவேற்று தர அரச ஊழியர்களுக்கு அதிகளவில் பணம் ஒதுக்குவதற்கு பணம் இருந்தால் ஏன் ஆசிரியர்களின் சம்பள மிகுதியை வழங்குவதற்கு பணமில்லை என்று கூறுக் கொண்டிருக்கிறீர்கள்.

எனவே ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாட்டினை தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுத்து மாணவர்களின் கல்வியை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

இந்த அரசாங்கத்திற்கு எமது பலத்தை காட்டுவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.இனியும் நாங்கள் ஏமாறுவதற்கு தயாரில்லை என்பதை அரசாங்கத்திற்கு எடுத்து கூற வேண்டும் என்றார்.

குறித்த விசேட செய்தியாளர் சந்திப்பில் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக இலங்கை ஆசிரியர் சேவை சங்க உப செயலாளர் ஏ.ஆதம்பாவா, இலங்கை ஆசிரியர் சேவை சங்க அம்பாறை மாவட்ட செயலாளர் எம்.எஸ்.சத்தார், இலங்கை ஆசிரியர் சேவை சங்க கல்முனை கல்வி வலய இணைப்பாளர் எஸ்.எம் ஆரிப், உள்ளிட்டோர் கலந்து கொண்டு தத்தமது கருத்துக்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment